ETV Bharat / state

'தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு' - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

author img

By

Published : Oct 28, 2022, 10:24 PM IST

sp velumani  sp velumani accuse income tax  income tax  assets  Asset Accumulation Case  சொத்து குவிப்பு வழக்கு  எஸ் பி வேலுமணி  சென்னை உயர் நீதிமன்றம்  எஸ் பி வேலுமணி குற்றச்சாட்டு  எஸ் பி வேலுமணி சொத்து குவிப்பு வழக்கு  முன்னாள் அமைச்சர் வேலுமணி  வேலுமணி
sp velumani

தன்னுடைய வருமானத்துக்கு கணக்கு காட்டும்படி விளக்கம் கேட்காமலேயே தனக்கெதிராக சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கையும், சொத்துக்குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று (அக்டோபர் 28) இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராஜு மற்றும் சித்தார்த் தவே ஆகியோர், தேர்தல் வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து விவரங்களின் அடிப்படையில் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறியிருந்தாலும், பொதுப்படையாக எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த முதல் தகவல் அறிக்கைப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத்தெரிவித்தனர்.

மேலும் உறவினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும் வேலுமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், உறவினரின் பணத்தை வேலுமணியின் பணம் எனக் கூற முடியாது எனவும் தெரிவித்த வழக்கறிஞர்கள், 2016இல் வேலுமணிக்கு 3 கோடி ரூபாய் சொத்து இருந்ததாகவும், 2021இல் அது 3.3 கோடி ரூபாயாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.

வருமானத்துக்கு உரிய வகையில் கணக்கு காட்ட முடியாவிட்டால் தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிய முடியும் எனவும், இந்த வழக்கில் வருமானத்துக்கு கணக்கு காட்டும்படி விளக்கம் கேட்காத நிலையில் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும் வாதிட்டனர்.

தொடர்ந்து வழக்கில் புகார்தாரரான ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே, உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுவதை ஏற்கக்கூடாது எனக்குறிப்பிட்டார். புலன் விசாரணை அலுவலரின் விசாரணை முடிவின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மத்திய கணக்குத் தணிக்கைக் குழு அறிக்கை வெளியானது எனவும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

இந்த அறிக்கை குறித்து விசாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், டெண்டர் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அலுவலர்கள் பெயரை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை எனவும், தொடர்புடைய அலுவலர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்ப கட்டம் தான் என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக் கோர முடியாது எனவும் தெளிவுபடுத்தினார். பின்னர், வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: பாஜக பந்த் வழக்கு; போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.