ETV Bharat / state

'திராவிட மாடல் எனக் கூறிக்கொள்ளும் அரசு சுகாதார உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'

author img

By

Published : May 10, 2023, 3:52 PM IST

Social Equality Doctors Association General Secretary said DMK government should be fulfill the medical sector demands
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் மருத்துவத் துறை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்

'திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததுபோல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுகாதார உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும்' என சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் மருத்துவத் துறை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து தற்போது இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதில் கடந்த இரண்டு ஆண்டில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடையே வரவேற்பு மற்றும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் குறிப்பாக சுகாதாரத்துறையில் பல வாக்குறுதிகளும், எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக மருத்துவ சங்கங்கள் வேதனை தெரிவிக்கின்றன.

இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறுகையில், ''திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து தற்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் மக்கள் விரும்பக்கூடிய பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி செயலாற்றி வருகிறது.

குறிப்பாக, இன்னுயிர் காப்போம் நம் உயிர் காப்போம் 48 என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தின் அடிப்படையில் விபத்து போன்ற நிகழ்வுகளில் சிக்கும் நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற, முதல் 48 மணி நேரத்தில் எந்த ஒரு நேரடிக் கட்டணமும் செலுத்தாமல் சிகிச்சைப் பெற முடியும். அதன் பிறகு அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும். அதன் பிறகு சிகிச்சை பெறும் கட்டணத்தை அரசு நேரடியாக மருத்துவமனைகளில் செலுத்தும். இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதேபோல், ''மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்'' நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பக்கவாதம், சர்க்கரை நோய், மிகை ரத்த அழுத்தம் உள்ளிட்டப் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளியே செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகும் நபர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றுள்ளது. இருந்தபோதிலும் இத்திட்டத்திற்கான போதிய மருந்துகள் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக அரசு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாமல் இருப்பது, மருத்துவத் துறையில் விரக்தியும், அதிருப்தியும் ஏற்படுத்தி உள்ளது. காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு ஏற்ப அரசு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தினோம்.

மேலும் அரசு மருத்துவ சங்கங்கள் இணைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்களை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது நான் ஆட்சிக்கு வந்தால் உங்களது கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியை கொடுத்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது மருத்துவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் MRB தேர்வு எழுதி வெற்றி பெற்று மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தியும் 8000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டும் செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு வெறும் 18,000 ரூபாய் மட்டுமே தொகுப்பு ஊதியமாக வழங்கப்படுகிறது. அவர்கள் தொடர்ந்து பணி நிரந்தரம் வழங்குமாறு கோரிக்கை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கையினையும் தமிழ்நாடு அரசு தற்போது வரை நிறைவேற்றவில்லை.

திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள செவிலியர்கள், மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை கொடுத்தது. ஆனால், அதற்கு மாறாக அவர்களுக்குப் பணி நிரந்தரம் கொடுக்காமல் தற்காலிகப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர்.

கரோனா காலத்தில் அர்ப்பணிப்போடு பணியில் ஈடுபட்ட செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அவர்கள் மத்தியில் பெரும் அது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதேபோல் கரோனா காலத்தில் டயாலிசிஸ் டெக்னிஷியன்கள் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு கடந்த ஆட்சியில் பணி அமர்த்தப்பட்டார்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 மாதங்கள் கழித்து அவர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, மீண்டும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அவுட்சோர்சிங் அடிப்படையில் வெறும் 8000 ரூபாய் சம்பளத்திற்கு அவர்களை பணி நியமனம் செய்துள்ளது. இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நல்ல அரசு என மக்கள் கருத வேண்டும் என்று சொன்னால், ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தை விட ஒரு ரூபாயாவது கூடுதலாக வழங்க வேண்டும். ஆனால், 20ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியவர்களை பணி நீக்கம் செய்து, மீண்டும் 8ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிநியமணம் செய்து இருப்பது தொழிலாளர்கள் விரோதப் போக்காகத்தான் பார்க்கப்படும்.

அதேபோல், மிக முக்கியமாக அரசு மருத்துவமனைகளில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் எனக் கூறியிருந்த நிலையில், இன்னும் அந்த காலிப் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை. அமைச்சர் மா.சுப்பிரமணியம் தற்காலிக அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என வாக்குறுதி அளித்தார். அதேபோல் மருத்துவத் துறையில் உள்ள 30 ஆயிரம் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் எனும் வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை ஒருவர் கூட பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இது மருத்துவ பணியாளர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல், கடந்த ஆட்சிக்காலத்தில் அம்மா கிளினிக் என்ற திட்டம் துவங்கப்பட்டது. அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், திமுக அரசு அம்மா கிளினிக்கை மூடியது மட்டும் இல்லாமல், அதில் இருந்த பணியாளர்களையும் வேலையை விட்டு நீக்கியது. இது பொதுமக்களிடமும், மருத்துவப் பணியாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் பேறுகாலத்தில் தாய்மார்கள் குறைந்த இறப்பு விகிதத்தில் கேரளாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் முன்னேறி இருந்தது. ஆனால், அதில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறியுள்ளன. தற்போது தமிழ்நாடு ஐந்தாவது இடத்திற்குப் பின் தங்கி உள்ளது. இது மிகவும் பரிதாபத்திற்குரிய நிலை. இதற்கு முக்கியக் காரணம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பிரசவம் பார்ப்பது தான்.

மேலும் கர்ப்பிணிகளிடையே ஏற்படும் ரத்த சோகையை குறைக்க நடவடிக்கை எடுக்காததாலும், பேறு காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சேர வேண்டிய நிதி முறையாக கொடுக்காததாலும், அதே போல் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பதைக் குறைக்க வேண்டும் என மருத்துவத்துறை கூறி வருவதாலும், இதன் மூலம் பேறுகால கர்ப்பிணிகள் தமிழ்நாட்டில் அதிக அளவில் இறப்பின் காரணமாக இருக்கலாம். எனவே, தமிழக அரசு இது குறித்து ஆராய்ச்சி செய்து குறைபாட்டைத் தீர்க்க வேண்டும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: அதேபோல், குறிப்பாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் செய்யப்பட்டது. ஆனால், தற்போது தமிழ்நாடு பின்தங்கி விட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் பிற மாநிலங்கள் முன்னிலைப் பெற்றுள்ளன. இதற்கு கரோனாவை அரசு காரணம் காட்டக்கூடாது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உறுப்புகளை வழங்கும் மையமாக அரசு மருத்துவமனைகளும், அதே சமயத்தில் அதிக உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகின்ற மையங்களாக தனியார் மருத்துவமனைகளும் இருகின்றது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஏழைகள் உறுப்புகளை வழங்குபவர்களாகவும், பணக்காரர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கூடியவர்கள், அதனைப் பெறுகிறவர்களாகவும் இருக்கிறது. இந்தப் போக்கு தற்பொழுது தமிழ்நாட்டில் அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் இருந்தாலும் அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான திட்டத்தினை தீவிரமாக தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதன் காரணமாக தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்துள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு சாதனைகளை செய்திருந்தாலும் கூட இது போன்ற திட்டங்களில் பின்னடைவு சந்தித்து இருப்பது வேதனை அளிக்கிறது.

நோயாளிகள் ஏன் தனியார் மருத்துவமனைக்குத் தள்ளப்பட வேண்டும்: அதேபோல் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மக்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருப்பதாக அரசு கூறுகிறது. இதன் மூலம் அரசு மருத்துவமனைக்கு 550 கோடி வருவாய் வந்துள்ளதாகவும் கூறுகின்றனர். மருத்துவக் காப்பீடு நிறுவனங்களிடம் அரசு கோடி கோடியாக வாரி வழங்கிவிட்டு மீண்டும் இத்திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் காப்பீடு மூலமாக சிகிச்சைப் பெறுவதன் மூலம் காப்பீடு பெறுகிறோம் என்றால், இது வேடிக்கையாக உள்ளது. இந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் மூன்றாம் நபர்கள் அதிகம் லாபம் சம்பாதிக்க வழிவகை செய்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு காப்பீட்டு திட்டத்தை அரசு தொடங்கியது. அப்போது அரசு மருத்துவமனையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. அரசு மருத்துவமனைகள் ஏராளமான நோயாளிகள் காத்திருந்தனர், போதிய மருத்துவக் கருவிகள் இல்லை. ஆனால், தற்போது அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் இருக்கும் நிலையில் ஏன் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்குத் தள்ளபடுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அரசு மருத்துவமனையில் செய்யக்கூடிய சாதாரணமான அறுவை சிகிச்சை கூட ஏன் தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகள் லாபம் அடைகின்றன. அதேபோல், மருத்துவக் காப்பீடு நிறுவனங்களும் லாபம் அடைய அரசு செயல்படுவதாக மருத்துவ சங்கங்கள் கருதுகின்றன.

இதனால் தமிழக அரசு மருத்துவமனைகளில் இல்லாத சிகிச்சைக்கு தான் மருத்துவக் காப்பீட்டு மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அனைத்து உறுப்பு அறுவை சிகிச்சைகளும் அரசு மருத்துவமனையில் செய்யக்கூடிய நிலையில், ஏன் அவர்கள் தனியார் மருத்துவமனைக்குத் தள்ளப்படுகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காப்பீடு திட்டத்தின் மூலம் பல நூறு கோடிகளை தனியார் மருத்துவமனைக்கு அரசு வழங்குவதை விட, அதை வைத்து அரசு மருத்துவமனை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக உள்ளது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: திமுகவினர் தேர்தல் நேரத்தில் திருச்சியில் நடத்திய மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கல்விக்கும், மருத்துவத்திற்கும் தற்போது வழங்கக்கூடிய நிதியை விட மூன்று மடங்கு அதிகமாக வழங்குவோம் என்ற வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது மூன்று மடங்கு நிதியை உயர்த்தி வழங்கவில்லை.

மாறாக கடந்த ஆண்டு வழங்கியதை விட இந்த ஆண்டு குறைந்த நிதி மருத்துவத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. கொடுத்த வாக்குறுதியை போல் திமுக அரசு மருத்துவத் துறைக்கு மூன்று மடங்கு நிதியை உயர்த்தி கொடுக்க வேண்டும். அதேபோல் மிக முக்கியமாக தற்போது ராஜஸ்தான் அரசு சுகாதாரத்துறை உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆளும் மாநிலம் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் அரசு திராவிட மாடல் ஆட்சி எனவும்; திராவிட மாடல் மருத்துவத் துறை இந்தியாவில் சிறந்த மருத்துவத் துறை என கூறும் அரசாங்கம், சுகாதார உரிமைச் சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும். இதுவரை கொண்டு வராதது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இதை மிக முக்கிய கோரிக்கையாக அனைத்து மருத்துவ சங்கங்களும் வைத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குஜராத் மாடல் Vs திராவிட மாடல் - பிரதமரை காட்டமாக விமர்சித்த டிகேஎஸ் இளங்கோவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.