ETV Bharat / state

"தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் எஸ்சி-எஸ்டி மாணவர்களிடம் வைப்புத்தொகை வசூலிக்க வேண்டாம்" - ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர்!

author img

By

Published : Aug 8, 2023, 7:49 PM IST

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களில், கல்வி உதவித் தொகை பெற தகுதியானவர்களிடம் கல்லூரிகள் வைப்புத் தொகையை வசூலிக்க வேண்டாம் என ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

SC ST Students
மருத்துவக் கல்லூரி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு முடிந்து, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதில், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் வைப்புத்தொகை பெறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரும் பட்டியலின, பழங்குடியின மற்றும் எஸ்.சி. அருந்ததியர் சமூக மாணவர்களிடம் வைப்புத் தொகை வசூலிக்க வேண்டாம் என ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், "அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரும் SC, ST, SCA மாணவர்களிடம் வைப்புத் தொகை 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டாம். கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தப்படும். இதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் கட்டணம் செலுத்தப்படும் - இதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் SC, ST, SSC மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ஒரு லட்சம் வைப்புத் தொகையையும் வசூலிக்கத் தேவையில்லை. அவர்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசின் சிறப்பு கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிஎம்எஸ்எஸ் (PMSS) கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கு தகுதிபெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த 7 நாட்களுக்குள் கல்விக் கட்டணங்கள் நிறுவனத்திற்கு செலுத்தப்படும். இதனால், மேற்குறிப்பிட்ட மாணவர்களிடம் வைப்புத் தொகையை வசூலிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரின் இந்த கடிதம் தொடர்பாக மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறவனத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்களிடம் சாதி குறித்த எந்த விதமான தகவலும் கேட்கப்படுவதில்லை. மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம், சாதிச் சான்றிதழ் போன்றவையும் கேட்கப்படுவதில்லை.

இந்த நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின் கடிதத்திற்கு விளக்கங்களைக் கேட்க வேண்டியுள்ளது. மேலும், வரும் ஆண்டில் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானத்திற்கான சான்றிதழையும் பெற வேண்டிய நிலை உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: "நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்" - எதற்காக இப்படி சொல்கிறார் வேல்முருகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.