ETV Bharat / state

‘மது விற்பனைக்கு தடை விதிக்க முடியாது’ - சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : May 25, 2023, 8:00 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுவிலக்கு சட்டத்தில் பார்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மது விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சென்னை: தஞ்சாவூரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மே 21 ஆம் தேதி மது அருந்தி 2 பேர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை சோதித்து உறுதிபடுத்தும் வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபானங்களை விற்க தடை விதிக்க கோரி கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆர்.பூமிராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், “டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களில் மதுபானங்களை விற்கவோ, சேமித்து வைக்கவோ சட்ட ரீதியாக அனுமதியளிக்கப்படாத நிலையில் அனைத்து டாஸ்மாக் பார்களிலும் காவல் துறையினர் மற்றும் கலால் துறை அதிகாரிகளின் உதவியுடன் 24 மணி நேரமும் தடையின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பார்களில் தரமற்ற மதுபான வகைகளும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூலமாக விற்கப்படும் மதுபான வகைகள் உண்மையிலேயே தரமானவையா, அதில் எத்தனை விழுக்காடு எத்தில் ஆல்கஹால் உள்ளது மற்றும் அந்த மதுபான வகை அருந்த உகந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கிளப்கள், ஹோட்டல்களில் நேரத்தைத் தாண்டி மது விற்பனை; நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனு

மேலும், “மதுபானங்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான குடோன்கள் மற்றும் டாஸ்மாக் விற்பனை மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை சோதித்து உறுதிபடுத்தும் வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்களை விற்க தடை விதிக்க வேண்டும். டாஸ்மாக் மதுபானங்களை, அருகில் உள்ள பார்களில் வைத்து விற்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோரது அமர்வில் இன்று ( மே 25 ) விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுவிலக்கு சட்டத்தில் பார்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மது விற்பனைக்கு தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மதுவிலக்கு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளிடம் தான் முறையிட முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை ஜூன் மாதம் 2 ஆவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தென்காசி டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் வசூல் - விற்பனையாளர் கூறிய பலே காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.