ETV Bharat / state

காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வேளான் தொழில் பெருந்தடம் திட்டம்

author img

By

Published : Mar 21, 2023, 9:53 PM IST

தொழில் பெருந்தடம் திட்டம்
தொழில் பெருந்தடம் திட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெருந்தடம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெருந்தட திட்டம் செயல்படுத்தப்படும். அதற்காக 38 கோடியே 90 லட்சத்து 44,606 ரூபாய் கோடி வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது 2023-24ஆம் ஆண்டில் வேளாண்மை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தி, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு, உணவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்: வரும் ஆண்டில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அமைக்கும் தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் மானிய உதவி, சுயஉதவிக்குழுக்களுக்கு ஆதார மூலதனம், பொதுவான கட்டமைப்புகள் ஆகியவற்றுக்காக 160 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கப்படும்.

பட்டு வளர்ச்சி: பட்டு வளர்ப்பு மூலம் கிடைக்கும் அதிக வருவாய் அதிக அளவில் விவசாயிகளை பட்டு வளர்ப்பின்பால் திருப்பியுள்ளது. இதனை ஊக்குவிக்கும் விதமாக, வரும் ஆண்டில் மானாவாரி மேம்பாட்டுத்திட்டத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் 250 ஏக்கரில் மர மல்பரியும், 100 எண்ணிக்கையில் மண்புழு உரக்கூடங்களும் அமைக்கப்படும். நுண்ணீர்ப் பாசனத்திட்டத்தில், மல்பரித் தோட்டங்களில் சொட்டுநீர்ப்பாசன அமைப்புகள் நிறுவப்படும்.

எரிசக்தி: வேளாண்மைக்கான பாசன நீரினை அளித்து பயிரைக் காப்பதில் இத்துறையின் பங்கு இன்றியமையாதது. உழவர் பெருமக்களுடைய நீர்ப் பாசன வசதியை மேம்படுத்துவதற்காக 23 லட்சம் இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தேவையான கட்டணத் தொகையாக, சுமார் 6,536 கோடி ரூபாய் நிதியினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு அரசு வழங்கும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் தரிசுநிலத் தொகுப்புகளில் அமைக்கப்படவுள்ள ஆழ்துளை/ திறந்தவெளிக் கிணறுகளுக்கும், ஆதிதிராவிட/ பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் மொத்தம் 600 மின் இணைப்புகள் நடப்பாண்டைப் போலவே வரும் ஆண்டிலும் வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGS): வரும் ஆண்டில், 6,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை வள மேலாண்மைப் (NRM) பணிகளான தடுப்பணை, பண்ணைக் குட்டைகள், கசிவு நீர்க்குட்டைகள், புதிய குளங்கள், கால்வாய்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள், கல் வரப்பு, மண் வரப்பு, தனிநபர் கிணறு, சமுதாயக் கிணறு, பால் சேகரிப்பு மையம், உணவு தானியக் கிடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிட 19,400 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேளாண்மைக்கு இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்காகவும் வரும் ஆண்டில் 710 கோடி ரூபாய் செலவில் கிராமப் பஞ்சாயத்துகளில் 2,750 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஊரகச் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-ல் 368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம், சேமிப்புக் கிடங்கு, பால் சேகரிப்பு மையம், சிறு பாசனத் தொட்டிகள், குளங்கள், ஊருணிகளின் புத்தாக்கம், புனரமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்வளத் துறை: வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

கால்நடை பராமரிப்பு: தீவன உற்பத்தி, பாதுகாப்பு முறைகள், மேய்ச்சல், பண்ணை இயந்திரமயமாக்கல் போன்றவற்றில் சமீபத்திய தொழில்நுட்பம் குறித்து 60 வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும். மேலும், பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க தோட்டங்களில் பசுந்தீவனப்பயிரை ஊடுபயிராகப் பயிரிட ஊக்குவிக்கும் வகையில் 60 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.

மீன் வளம்: நாட்டின மீன் வகைகளை அழியாமல் பாதுகாத்திடும் நோக்கில், சேல்கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டை மீன் போன்ற நாட்டின மீன் குஞ்சுகளை தமிழ்நாட்டின் காவிரியாறு, பவானியாறு, தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளில் நன்கு வளர்ந்த 40 இலட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்படும். இவ்வாறு ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுவதன் மூலம் நாட்டின மீன் வகைகளின் உற்பத்தி அதிகரிக்கும்.

ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தபடுவதன் மூலம் ஆறுகளில் மீன் உற்பத்தி அதிகரிப்பதுடன் ஆறுகளைத் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருமானம் அதிகரிக்கும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் இயந்திரங்கள்: கிராமங்கள் தோறும் வேளாண் இயந்திரங்கள் தடையின்றிக் கிடைக்க ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பகுதிகேற்ற வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டு விவசாயிகள் தேவைக்கேற்ப இ-வாடகை செயலியுடன் இணைத்து வாடகைக்கு விடப்படும். இதற்கென 500 கோடி ரூபாய் நபார்டு வங்கி உதவியுடன் ஒதுக்கீடு செய்யப்படும்.

கூட்டுறவு கடன்: வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும்.

நேரடி நெல் கொள்முதல்: வரும் ஆண்டு நெல் கொள்முதல் செய்ய சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குக் கூடுதலாக 100 ரூபாயும், பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குக் கூடுதலாக 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமனம்: விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்காக, வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் அல்லது வேளாண் அறிவியல் நிலையங்களிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார்.

வாழை ஆராய்ச்சி நிலையம் அமைத்தல்: தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் வாழைக்கென ஒரு தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இதற்கென 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

வேளாண்மையில் நானோ தொழில்நுட்பம்: இந்த ஆண்டு நானோ தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் அறியும் வண்ணம் வேளாண் அறிவியல் நிலையம் (KVK), அட்மா திட்டம் (ATMA) ஆளில்லா வானூர்திக் கழகம் (Unmanned Arial Vehicle Corporation) மூலம் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்படும்.

தாவரவியல் பூங்காவினைச் சீரமைத்தல்: அழிவின் விளிம்பில் உள்ள தாவர பல்லுயிர் செல்வத்தை மேம்படுத்தவும், பல்வகை சிறப்பு வாய்ந்த பூங்காக்களை நிறுவவும், தொழில் முனைவோர் பயிற்சிகளை அளிக்கவும் உதவியாக இருக்கும்பொருட்டு, இதைச் சீரமைக்க, வரும் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கொப்பரைத் தேங்காய் கொள்முதல்: வரும் கொள்முதல் பருவத்தில், 640 கோடி ரூபாய் மதிப்பிலான 56,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காயினை ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price) தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் (NAFED) இணைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு, வரும் ஆண்டு 530 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்: இந்த பல்கலைக்கழகத்திற்கு 100 கோடி ரூபாய் நிரந்தர மூலதன வைப்பு நிதியாக வழங்கப்படும்.

பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்துதல்: பூச்சிகளைப் பற்றிய புரிதல் இருந்தால்தான் அவற்றின்மூலம் ஏற்படுகிற நோய்களையும் கட்டுப்படுத்த முடியும். உழவர் பெருமக்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பூச்சிகளைப் பிரித்து அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தைக் கணினிமயமாக்கும் பணி கட்டாயம் அவசியம். இந்த மையத்தை மெருகேற்றவும், மேம்படுத்தவும், மேலும் கட்டமைப்புகளை உருவாக்கவும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது: கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் கடலூர், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 31,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 25 குளிர்பதனக் கிடங்குகளுக்கும் கிடங்கு மேம்பாடு-ஒழுங்குமுறை ஆணையத்தின் (WDRA) அங்கீகாரம் பெற்று மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ–நாம்) – விரிவுபடுத்துதல்: வரும் ஆண்டில், 30 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்துடன் இணைக்கப்படும்.

உழவர் சந்தைகளைப் புதுப்பித்தல்: வரும் ஆண்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 இலட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொன்மை சார் உணவகங்கள்: முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.

புவிசார் குறியீடு பெறுதல்: வரும் ஆண்டிலும், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புகவுணி அரிசி ஆகிய பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிப்புக் கிடங்குகளை மறு கட்டமைப்பு செய்தல்: காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில் 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில், வரும் ஆண்டில் 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அதிக வரத்துள்ள 100 விற்பனைக் கூடங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விற்பனைக்குழு நிதியில் புதுப்பிக்கப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் புதிய, கூடுதல் கட்டமைப்புகள்: விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி, திருவெண்ணைநல்லூர், தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம், திருவண்ணாமலை மாவட்டத்தில், நாயுடுமங்கலம், ஆதமங்கலம்புதூர் கடலூர் மாவட்டத்தில், வேப்பூர் ஆகிய இடங்களில் பரிவர்த்தனைக் கூடங்கள், உலர் களங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்ற வசதிகள் மொத்தம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்.

ஒவ்வொரு கிராமத்திற்கு இரு பவர் டில்லர்கள்: வரும் நிதியாண்டில், 2,504 கிராமங்களுக்கு 43 கோடி ரூபாய் மானியத்தில் 5,000 பவர்டில்லர்கள் வழங்கப்படும்.*வட்டார அளவில் வேளாண்மைப் பொறியியல் துறையின் செயல்பாட்டினை வலுப்படுத்துதல்*வட்டார அளவில் வேளாண் பணிகளைத் தங்குதடையின்றி மேற்கொள்ள உதவும்பொருட்டு, டிராக்டர்கள், ரோட்டவேட்டர்கள், எந்திரக் கலப்பைகள், கரும்பு அறுவடை இயந்திரங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு துறையின் இ-வாடகை செயலியின் மூலமாக குறைந்த வாடகைக்கு விடப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாயிகள் மகிழும் அளவுக்கு பட்ஜெட்டில் எதுவுமில்லை - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.