ETV Bharat / state

'லியோ' வெற்றி விழா: ரசிகர்களுக்கு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 4:12 PM IST

leo success meet: லியோ திரைப்படம் வெற்றி விழாவில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு சென்னை மாநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

லியோ திரைப்பட வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன
லியோ திரைப்பட வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் லியோ உலகளவில் 540 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் லியோ படத்தில் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது. இந்த வெற்றி விழா நிகழ்ச்சிக்குத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் காவல்துறை அனுமதியைப் பெற்று விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா மேடைகள் அமைப்பது, பேனர்கள் ஒட்டுவது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக வழிகள், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விஜய் ரசிகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் முன்பாக குவிந்து உள்ளனர். மேலும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் விஜய் ரசிகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளனர். ஆனால் லியோ வெற்றி விழாவில் கலந்து கொள்ள குறிப்பிட்ட சில விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்ற ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் காவல்துறையினர் இன்று 4 மணிக்குத் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், ஐந்தாவது நுழைவு வாயில் வழியாகத்தான் ரசிகர்கள் அனைவரும் உள்ளே செல்ல வேண்டும் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள் கொண்டு வரும் பதாகைகளைச் சாலை ஓரமாக வைக்கக் கூடாது. விஜய் வரும் நேரமோ அல்லது மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும், பேரணியாகவோ கும்பலாகவோ வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்து உள்ளனர். மேலும் 4 மணிக்கு மேல் அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்திற்கு பின்புறம் உள்ள 5வது நிழைவு வாயில் வழியாக ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.