ETV Bharat / state

இந்தி திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றம்

author img

By

Published : Oct 18, 2022, 4:15 PM IST

Etv Bharatஇந்தி திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றம்
Etv Bharatஇந்தி திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றம்

முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த இந்தித் திணிப்புக்கு எதிரான அரசினர் தனித் தீர்மானம் இன்று (அக்-18) சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்தித் திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையானது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

அரசினர் தனித் தீர்மானம்: "ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித் ஷா தலைமையிலான குழு சமீபத்தில் குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது. அந்தப் பரிந்துரைகளில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

இப்படி ஆங்கிலத்தைப் புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது, நடைமுறைபடுத்தக் கூடாது என பிரதமருக்கு 16-10-2022 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் அவையில் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மானத்திற்கு எதிராக, பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

தாய்மொழியான தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9-9-2022 அன்று குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது."

பேரவையில் இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிய அண்ணாவின் அதே உணர்வுடன், இந்தத் தீர்மானத்தைத் தற்போது முன்மொழிந்துள்ளேன். உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுகொண்டார். பின்னர் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த இந்தித் திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க:ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது - - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.