ETV Bharat / state

கூட்டுறவு வங்கி மூலம் வீட்டு மனை கடனுதவி: 44 புதிய அறிவிப்புகள் வெளியீடு... என்னென்ன தெரியுமா?

author img

By

Published : Apr 7, 2023, 8:17 AM IST

cooperative sector
கூட்டுறவு வங்கி மூலம் வீட்டு மனை கடனுதவி

கூட்டுறவு வங்கிகளின் மூலம் வீட்டு மனை வாங்க கடனுதவி உள்ளிட்ட 44 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சட்டப் பேரவையில் வெளியிட்டார்.

சென்னை: கூட்டுறவு வங்கிகளின் மூலம் வீட்டு மனை வாங்க கடனுதவி வழங்கப்படும் என கூட்டுறவுத் துறையின் சார்பில் புதிதாக 44 அறிவிப்புகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் வெளியிட்டுள்ளார். அதன் பட்டியல்,

சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இரண்டு புதிய வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் அமைக்கப்படும். மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக புதிதாக ஒன்பது மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்படும். ஐந்து இதர வகை கூட்டுறவு சங்கங்கள் மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களாக மாற்றப்படும். வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய கிளை துவங்கப்படும்.

மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு 5% என்கிற குறைந்த வட்டியில் தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கியே கடனுதவி வழங்கும். நீலகிரி மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பந்தலூர் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு சங்க கட்டடங்கள் நவீன மயமாக்கப்படும் ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக இரண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் துவங்கப்படும். கூட்டுறவு வங்கிகளின் மூலம் வீட்டு மனை வாங்க கடனுதவி வழங்கப்படும்.

கூட்டுறவு வங்கிகளின் நாட்டுப்புறக் கலைஞர்கள் பாரம்பரிய கலைப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு சிறப்பு கடன் உதவி வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளின் மூலம் மூத்த குடிமக்களுக்கு மறு அடமான கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளின் மூலம் ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வாகனம் வாங்க கடன் வழங்கப்படும்.

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிட கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் உறுப்பினரின் வயது உச்சவரம்பு 60 இலிருந்து 70 ஆக உயர்த்தப்படும். தர்மபுரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என தனி மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் துவங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டம் பாமணி மற்றும் திண்டுக்கல்மாவட்டம் எரியோடு ஆகிய இடங்களில் இரண்டு மண்புழு உற்பத்தி அலகுகள் அமைக்கப்படும்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு 5 புதிய கிளைகள் துவங்கப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் கடநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் கிடங்குடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படும். கூட்டுறவு நகர வங்கி, நாணய வங்கி மற்றும் உழவர் பணி கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டடங்கள் பழுது பார்த்து நவீனம் ஆக்கப்படும்.

விருதுநகர், நாமக்கல், சேலம், திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 33 கூட்டுறவு சங்கங்களில் பாதுகாப்பு வசதிகள் 2.23 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிறுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய உலர் களம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 5000 நியாய விலை கடைகளில் ஐஎஸ்ஓ 9001 தர சான்றிதழ் பெறப்படும். தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் அலகுகளுக்கு ISO 9001 சான்றிதழ் பெறப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் திரூரில் ஒரு கூட்டுறவு அருங்காட்சியகம் ஒரு கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். நபார்ட் வங்கியின் கடன் உதவியுடன் 2000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றப்படும். மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் செம்மாண்டம் பாளையத்தில் உள்ள பழுதடைந்த நியாய விலை கடைக்கு பதிலாக புதிய நியாய விலை கடை ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: KKR VS RCB: பெங்களூருவுக்கு அதிர்ச்சி அளித்த கொல்கத்தா! "ஈ சாலா கப் நம்தே"?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.