ETV Bharat / state

Mamannan release: தடை வழக்கை தவிடுபொடியாக்கிய மாமன்னன்

author img

By

Published : Jun 28, 2023, 5:53 PM IST

ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனுவில், மாமன்னன் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் நடிகர் யோகிபாபு நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்து, 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீதப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் படமே தனது கடைசிப் படம் எனக் கூறியுள்ளார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால், தமக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும், ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஏற்கனவே 80 சதவீதப் படப்பிடிப்புப் பணிகள் முடிந்துவிட்டது என்றும், 8 நாட்கள் மட்டும் தங்களுக்கு நடித்துக் கொடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது, சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டதால் அரசியலில் மும்முரமாகிவிட்டார் என்றும், மேலும், மாமன்னன் படமே தனது கடைசி திரைப்படம் என்றும் உதயநிதி குறிப்பிட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

இதனை அடுத்து ரெட்ஜெயன்ட் மூவிஸ் தரப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் லிமிடேட் கூட்டு நிறுவனம் மூலம் மாமன்னன் திரைப்படம் தயாரிக்கப்பட்டதாகவும், ஏஞ்சல் திரைப்படத்திற்கு வாய்மொழி ஒப்பந்தம் மட்டும் தான் போடப்பட்டதாகவும், அதுவும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திடம் போடப்பட்டது என்றும்; ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்டனர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும், ஏஞ்சல் திரைப்படத்தில் நடித்து தருவது குறித்து பின்னர் உத்தரவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.