ETV Bharat / state

'வாரத்திற்கு ரூ. 1,000 வீதம் வழங்க அரசு முன்வர வேண்டும்' - ராமதாஸ்

author img

By

Published : Apr 14, 2020, 4:11 PM IST

ramadoss urged government should come forward to provide rs. 1,000 to people
ramadoss urged government should come forward to provide rs. 1,000 to people

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவுப் பொருள்களுடன், கூடுதலாக வாரத்திற்கு ரூ. 1,000 வீதம் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எளிதான ஒன்றல்ல. மக்களைக் காக்க வேறு வழியின்றி எடுக்கப்பட்ட முடிவு தான் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதாகும். ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அவர்கள் பட்டினியின்றி வாழ்ந்தால் தான், அவர்களின் ஒத்துழைப்புடன் ஊரடங்கு முழுமையாக வெற்றி பெறும்.

அதை உறுதி செய்யும் வகையில் தான் தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்; அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இரண்டாவது முறையாக தலா ரூ.1,000 உதவியாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலவச உணவுப் பொருள்களுடன், கூடுதலாக வாரத்திற்கு ரூ. 1,000 வீதம் வழங்க அரசு முன்வர வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்கள் பசியின்றி வாழ இது அவசியமாகும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அரசும், பொதுமக்களும் இணைந்து பணியாற்றி, தமிழ்நாட்டை கரோனா நோய் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.