ETV Bharat / state

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

author img

By

Published : Aug 30, 2021, 6:51 PM IST

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை அருகே கீழடியில் மாநில தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கண்கெடுக்கப்பட்டுள்ள பொருள்கள் 'உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்' என்பதை நிரூபிக்கத் தேவையான அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் இதுவரை நடத்தப்பட்ட 6 அகழாய்வுகளில் 5 ஆய்வுகளின் அறிக்கை வெளியாகாதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான அகழாய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வுகளின் ஏழாம் கட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருள்கள் அங்கு கிடைத்து வருகின்றன. கீழடி அகழாய்வில் ஆதன், உதிரன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஓடுகள் ஏற்கனவே கிடைத்திருந்த நிலையில், 13 எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள் இப்போது கிடைத்திருக்கின்றன. இந்த ஓடுகள் 2,600 முதல் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதால், அப்போது இருந்து தமிழர்கள் கல்வி அறிவு பெற்றிருக்கலாம் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது. இது விரைவில் நிரூபிக்கப்படக் கூடும்.

சிவப்பு வண்ண பானை

தங்கக் காதணிகள், கல்உழவு கருவி, இரும்பு ஆயுதம், உறைகிணறு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட 6 கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருள்களை விட இவை பழமையானவை என்பது ஒருபுறமிருக்க, இவை நவீன பயன்பாடு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன் 60 செ.மீ உயரம், 34 செ.மீ விட்டம், 24. செ.மீ. விட்டமுள்ள வாய்ப்பகுதி கொண்ட சிவப்பு வண்ண பானை கிடைத்திருக்கிறது. இது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்திருக்கிறது. இந்த பானை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் 5 பானைகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இன்னும் கூடுதலாக அகழாய்வு நடத்தினால் இன்னும் பல வியப்புகள் வெளிப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், செப்டம்பர் மாதத்தின் முற்பகுதியில் ஆய்வுகளை முடிக்க அலுவலர்கள் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழர் நாகரிகத்தின் தொன்மைக்கு கட்டியங்கூறும் ஏராளமான பொருள்கள் இந்த அகழாய்வில் கிடைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ஏழாம் கட்ட ஆய்வை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து விடக் கூடாது. மாறாக, இன்னும் சில வாரங்களுக்கு ஏழாம் கட்ட அகழாய்வுகளை நீட்டித்து தொல்லியல் சிறப்பு மிக்க பழங்கால பயன்பாட்டுப் பொருள்களை கண்டெடுக்க முயல வேண்டும். அதற்கு வசதியாக கீழடி ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.

அகழாய்வு முடிவுகள் வெளியாகவில்லை

மற்றொருபுறம் கீழடியில் இதுவரை மொத்தம் 6 கட்ட அகழாய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஒரே ஒரு அகழாய்வின் முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ளன. இதுவரை நடத்தி முடிக்கப்பட்ட 6 ஆய்வுகளில் முதல் 3 ஆய்வுகளை மத்திய தொல்லியல் துறையும், அடுத்த 3 ஆய்வுகளை மாநில தொல்லியல் துறையும் நிகழ்த்தியுள்ளன. 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகள் 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. தமிழர் நாகரிகம் குறைந்தது 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிரூபிக்க அந்த அகழாய்வு முடிவுகள் தான் அடிப்படையாக அமைந்தன. ஆனால், அதன்பின் நடத்தப்பட 5 மற்றும் 6 ஆம் கட்ட அகழாய்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதைவிடக் கொடுமை 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை நடத்திய முதல் 3 கட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கைகள் 6 ஆண்டுகளாகியும் வெளியிடப்படாதது தான்.

கீழடி அகழாய்வு வழக்கமான தொல்லியல் ஆய்வு அல்ல. அது தமிழர் நாகரிகத்தின் தொன்மையை பறைசாற்றுவதற்கான வேள்வி ஆகும். தமிழர் நாகரிகம் தொன்மையானது என்று மெய்ப்பிக்கப்படுவதை சில சக்திகள் விரும்பவில்லை. அதனால் தான் கீழடி அகழாய்வுக்கு தொடக்கம் முதலே முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வந்தன. தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வின் முடிவுகள் ஓராண்டில் வெளியான நிலையில், மத்திய அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் ஆறு ஆண்டுகளாகியும் வெளிவராதது இயல்பான ஒன்றல்ல. மதுரை உயர்நீதிமன்றத்தின் கண்டிப்புக்குப் பிறகும் காலதாமதம் செய்யப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும்

கீழடி அகழாய்வின் முடிவுகளுக்காக உலகம் முழுவதும் வாழும் பத்து கோடிக்கும் கூடுதலான தமிழர்கள் காத்துக் கிடக்கின்றனர். எனவே, முதல் 3 கட்ட அகழாய்வு அறிக்கைகளை உடனடியாக வெளியிடும்படி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும். 5 மற்றும் 6ஆம் கட்ட அகழாய்வு அறிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைவாக வெளியிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை திறந்துவைத்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.