ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி

author img

By

Published : Aug 27, 2022, 7:02 AM IST

Etv Bharat சிசிடிவி காட்சி

ரயிலில் பெண்கள் கோச்சில் ஏறி வியாபாரம் செய்யக்கூடாது என பெண் பயணிகள் முன்பு தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததால் பெண் காவலரை கத்தியால் குத்தியதாக கைதான வியாபாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயிலானது கடந்த 23ஆம் தேதி இரவு 9 மணி அளவில் புறப்பட தயாராக இருந்துள்ளது. அங்கு பெண்கள் கோச்சில் பாதுகாப்பு பணியில் ஆர்.பி.எஃப் காவலர் ஆசிர்வா (29) என்பவர் இருந்துள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்கள் கோச்சில் ஏற முற்பட்டதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த ஆசீர்வா, இது பெண்கள் கோச் எனவும், இதில் ஏறக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆர்பிஎஃப் காவலரான ஆசிர்வாவின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதில், காயமடைந்த ஆசிர்வா ஓடும் ரயிலில் இருந்து இறங்கி, உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆசிர்வாவை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண் காவலரை கத்தியால் கழுத்தில் குத்திய சம்பவம் தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சிசிடிவியில் பதிவான அடையாளங்களை வைத்து பெண் காவலரின் கழுத்தில் கத்தியால் குத்திய நபரை அடையாளம் கண்டு, அவரை கைது செய்து, எழும்பூர் ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் தனசேகர் என்றும் விழுப்புரம் அடுத்த திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியுடன் சென்னை பூக்கடை பகுதியில் உள்ள பிளாட்பார்மில் தங்கி பூ, பழ வியாபாரம், செல்போன் பவுச்சுகள் போன்றவற்றை விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

ரயிலில் தனசேகர் பூ மற்றும் பழ வியாபாரம் செய்யும் போது ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அவ்வப்போது பூ மற்றும் பழ வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுத்து வந்ததாகவும், குறிப்பாக பெண்கள் கோச்சில் ஏறி தனசேகர் விற்கும் போது காவலர்கள் தரக்குறைவாக பேசி கீழே இறக்கிவிட்டு வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனால் தொடர்ந்து இடையூறு செய்யும் ரயில்வே காவலர்கள் மீது தனசேகர் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி இரவு பீச் ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய ரயிலில் மது போதையில் தனசேகர் பெண்கள் கோச்சில் ஏறியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஆர்.பி.எப் காவலர் ஆசிர்வா இங்கு ஏறக்கூடாது எனக் கூறியுள்ளார்.

சிசிடிவி காட்சி

இதனால் கடும் ஆத்திரமடைந்த தனசேகர் பூ வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியால் பெண் காவலரை நெஞ்சு மற்றும் கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்கள் கோச்சில் ஏறிய போது தொடர்ந்து பெண் பயணிகள் முன்பு காவலர்கள் அவமானப்படுத்தியதால் கத்தியால் குத்தியதாக தனசேகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட தனசேகரிடம், எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனசேகர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ஆர்பிஎப் பெண் காவலர் ஆசீர்வா பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலைமையில் உள்ளதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Viral Video... காவல் நிலையத்தில் பெற்றோருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.