ETV Bharat / state

பல்லாவரத்தில் நாட்டுப்புற பாடகரின் செல்ஃபோன் திருட்டு - போலீஸ் விசாரணை

author img

By

Published : Apr 22, 2022, 8:59 PM IST

பல்லாவரம் வார சந்தையில் நாட்டுப்புற மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமியிடம் இருந்து 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்ஃபோன் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டுப்புற பாடகரின் செல்ஃபோன் திருட்டு
நாட்டுப்புற பாடகரின் செல்ஃபோன் திருட்டு

சென்னை விமான நிலையம் அடுத்த பல்லாவரத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று பல்லாவரம் வார சந்தை நடைபெறும். மிகவும் பிரபலமான இந்த சந்தைக்கு ஏராளமான மக்கள் பொருள்கள் வாங்க வருகின்றனர். இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் திருட்டு கும்பல் அங்கிருக்கும் இருசக்கர வாகனங்கள், செல்ஃபோன் உள்ளிட்டவற்றை திருடி வருகின்றனர்.

இதனால், அங்கு பாதுகாப்புப் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இன்று (ஏப்.22) சந்தையின் பாதுகாப்புப் பணியில் குறைந்தளவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த திருட்டு கும்பல் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளனர்.

சந்தைக்கு இன்று காலை செடிகள் மற்றும் கலைப் பொருள்கள் வாங்குவதற்காக பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வந்துள்ளார். சந்தையில் பொருள்களை வாங்கிக்கொண்டு இருந்தபோது அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்ஃபோனை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். அதுமட்டுமின்றி சந்தைக்கு வந்த புஷ்பவனம் குப்புசாமி உள்பட ஏழு பேரிடம் இருந்து செல்ஃபோன்களை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்ட பாதிக்கப்பட்டோர் பல்லாவரம் காவல் நிலையத்திலுள்ள குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புஷ்பவனம் குப்புசாமியி
புஷ்பவனம் குப்புசாமியி

பொதுவாகவே இந்த சந்தையில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பது வழக்கம் என்றாலும், காவல் துறையினர் பெரும்பாலான சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்வதில்லை என்று பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் போதே தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த செல்ஃபோன் திருட்டு சம்பவங்கள் நடந்திருக்காது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பல்லாவரம் குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரயில்வே ஸ்டேஷன் முன் சிறுநீர் கழித்த 4 பேருக்கு அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.