ETV Bharat / state

சொத்துப்பட்டியல் விவகாரம்: அடுத்த குறி அதிமுக? - அண்ணாமலையின் அரசியல் கணக்கு என்ன?

author img

By

Published : Apr 16, 2023, 4:49 PM IST

Etv Bharat
Etv Bharat

திமுகவின் முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த முறை ஆட்சியில் இருந்த மற்ற கட்சியினரின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என, அதிமுக பெயரை குறிப்பிடாமல் கூறியிருக்கிறார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலையும் அவர் தயார் செய்து வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவ்விவகாரத்தில் அண்ணாமலையின் அரசியல் கணக்கு என்னவாக இருக்கும்? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

சென்னை: திமுகவின் முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை DMK Files என்ற தலைப்பில் அண்ணாமலை வெளியிட்டது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட 17 பேரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். வெளியிடப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.1.34 லட்சம் கோடி ஆகும்.

இதுகுறித்து இன்னும் ஒரு வாரத்தில் டெல்லி சென்று சிபிஐயில் புகார் அளிப்பேன் என மிரட்டியிருக்கிறார் அண்ணாமலை. இதற்கு திமுக தரப்பில், ”சொத்து பட்டியலைதான் வெளியிட்டுள்ளார். ஊழல் பட்டியலை அல்ல” என விளக்கம் அளிக்கப்பட்டது. அண்ணாமலையின் வீடு, கார் மற்றும் அனைத்தும் ஓசி என்றும், அவரது வீட்டின் வாடகை ரூ.3.75 லட்சம் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுகவை சீண்டும் அண்ணாமலை: இது ஒருபுறம் இருக்க கூட்டணி கட்சியான அதிமுகவையும் தீவிரமாக சீண்டத் தொடங்கியுள்ளார் அண்ணாமலை. கடந்த முறை ஆட்சியில் இருந்த மற்ற கட்சியினரின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என, அதிமுக பெயரை குறிப்பிடாமல் அவர் கூறியிருப்பது, அதிமுக - பாஜக கூட்டணியில் உச்சகட்ட சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக தலைவர்களும் அண்ணாமலையை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதிமுகவினர் விமர்சனம்: ”பாஜக எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பிற மாநிலங்களில் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன். இப்பட்டியலை பாஜக சார்பில் அண்ணாமலை வெளியிட்டாரா, தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா என்று தெரியவில்லை. நாட்டையே அண்ணாமலைதான் காப்பாற்றியது போல செயல்பட்டு வருகிறார்" என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.

"எங்களுக்கு மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை. அதிமுக சொத்துப் பட்டியலை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறட்டும், அப்புறம் எங்களுடைய விமர்சனம் எப்படி இருக்கும் என்பது தெரியும்” எனக் கூறியிருக்கிறார், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

"அண்ணாமலை பற்றி இனிமேல் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக அவர் செயல்படுகிறார். முதிர்ந்த அரசியல்வாதிகள் பற்றி கேளுங்கள். பதில் சொல்கிறேன்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது, அண்ணாமலை மீது அவர் கடும் காட்டத்தில் இருப்பதை காட்டுகிறது.

அரசியல் யுத்தம்: சமீப காலமாக எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே, அரசியல் யுத்தம் நடைபெறுவதை இரண்டு தரப்பும் அவ்வப்போது வெளிபடுத்திக் கொண்டே இருக்கின்றன. எனினும், டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்து வைக்கும் நிலையையும் காண முடிகிறது. ஆனால், அதிமுகவுடன் இணக்கமாக செல்ல அண்ணாமலை விரும்புவது போல் தெரியவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவினரின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என மறைமுகமாக அண்ணாமலை கூறியதை எடப்பாடி பழனிசாமியால் ஜீரணிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

அடுத்த திட்டம்: அண்ணாமலையின் இந்த அதிரடி குறித்து பாஜகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடம் விசாரிக்கும் போது, "திமுகவினர் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதை பாஜகவின் ஒரு சில தலைவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவினருடைய பட்டியலை வெளியிட்டால் நாளை அதிமுகவினருடைய பட்டியலை வெளியிட வேண்டிய சூழல் ஏற்படும். அது அதிமுக-பாஜக கூட்டணிக்கு நல்லதல்ல. இன்னும் பாஜக தனித்துப் போட்டியிடும் அளவிற்கு வளரவில்லை என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள மறுக்கிறார். அதிமுகவில் உள்ள 10க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை அவர் தயார் செய்து வைத்துள்ளார்" என்றனர்.

3வது அணியா?: இந்நிலையில் 2024ஆம் ஆண்டு பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைக்க அண்ணாமலை தயாராகி வருகிறார் என பரவலாகப் பேசப்படுகிறது. "பாஜக தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணியை விரும்பினாலும், அண்ணாமலை தொடர்ந்து திமுகவை கடந்து அதிமுகவிற்கும் எதிராக அரசியல் செய்ய நினைக்கிறார். அப்படி அரசியல் செய்யும் பட்சத்தில் திமுகவிற்கு நேரடி போட்டியாக வளர முடியும். அடுத்தது ஆட்சிதான் என்ற புள்ளியில் மிகவும் தெளிவாக நகர்கிறார். பாஜக தேசிய தலைமை அவ்வப்போது அண்ணாமலையைக் கண்டித்தாலும், அங்குள்ள தலைவர்களிடம் தான் செயல்படும் விதத்தை எடுத்துக் கூறி சரிசெய்து விடுகிறார்" என தமிழக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

பாஜகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கூறுவதைப் பார்க்கும் போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தயாராகி விட்டார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக தேசிய தலைமையில் உள்ள சில தலைவர்கள் அண்ணாமலைக்கு உறுதுணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விரிவடையும் விரிசல்?: இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறுகையில், "அதிமுகவின் சொத்துப் பட்டியலை வெளியிடுவேன் என அண்ணாமலை மறைமுகமாக கூறியது அதிமுக-பாஜக கூட்டணியில் மீண்டும் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்பும் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்தால் தேர்தல் சமயத்தில் தலைவர்கள் மட்டும்தான் ஒன்று சேர்வார்கள். தொண்டர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அண்ணாமலையை மாற்ற பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வருகிறது. ஆனால், இது போன்ற அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். இதன் மூலம் தன்னைத் தலைவர் பதவியில் இருந்து மாற்றம் செய்யாதபடி தேசிய தலைமைக்கு சூசகமாக தெரிவிக்கும் முயற்சியில் அண்ணாமலை இறங்கியுள்ளார் என்பது எனது கணிப்பு" எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் இதற்கு முன் இருந்த பாஜக தலைவர்களை விட, அண்ணாமலையின் சமீபத்திய செயல்பாடுகள் அனைத்தும் பேசு பொருளாகி வருகின்றன. அவர் போடும் அரசியல் கணக்கு சரி வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: காலில் விழுந்து பதவிபெற்று காலை வாரும் கலையைக் கற்றவர் - பாஜகவினர் விமர்சனத்தால் கொதித்த அதிமுகவினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.