ETV Bharat / state

பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ மைனிங் மூலம் 7.50 லட்சம் டன் கார்பன் உமிழ்வு தடுப்பு!

author img

By

Published : Feb 6, 2023, 9:55 AM IST

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ மைனிங் முறை மூலம் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கரியமில வாயு உமிழ்வு தடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை: இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில், சுமார் 250 எக்கர் நிலப்பரப்பளவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் 35 லட்சம் கன மீட்டர் அளவுள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் பிரித்து, மறுசுழற்சி மற்றும் செயலாக்கம் மூலம் நிலத்தை மீட்டெடுக்கும் பணி ஆறு சிப்பங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஏறத்தாழ 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒப்பந்தப் பணிக்காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டு, வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில், பணி நிறைவு பெற்று நிலம் மீட்டெடுப்பு செய்யப்படும். தற்போது வரை சுமார் 57 சதவீதம் பணி நிறைவுற்ற நிலையில், 19 லட்சத்து 66ஆயிரம் கனமீட்டர் அளவு குப்பைகள் பயோ-மைனிங் செய்யப்பட்டுள்ளன.

இப்பணியின் போது பிரித்து எடுக்கப்படும் குப்பைகளிலிருந்து சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் டன் எடையுள்ள RDF எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்து எடுக்கப்பட்டன. மேலும் பிரித்தெடுக்கப்பட்ட RDF எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி நிலக்கரிக்கு பதில் மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது.

மேற்கண்டவாறு ஒரு வருட கால அவகாசத்தில், மிகக் பெரிய அளவில், சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் டன் எடையுள்ள RDF எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் விஞ்ஞான ரீதியில் சிமெண்ட் ஆலையில் மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்நிகழ்வால் சுற்றுச்சூழலில் கரியமில உமிழ்வு (Carbon dioxide emission) சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு தடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூண்டில் வளைவுக்கு இல்லாத பாதிப்பு.. பேனா சின்னத்துக்கு வருமா? - அமைச்சர் மா.சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.