ETV Bharat / state

பிளாஸ்டிக் எனும் கொடூரன்.. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பகீர் தகவல்!

author img

By

Published : Jun 27, 2023, 6:10 PM IST

Etv Bharat
Etv Bharat

உலகின் மொத்த நெகிழியையும் ஒரு நாடாக உருவகித்தால், அந்த நாடு உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கார்பன் உமிழும் நாடாக இருக்கும். இது, நெகிழி பயன்பாடானது எந்த அளவுக்குக் காலநிலை மாற்றத்தோடு நெருங்கியத் தொடர்புடையது என்பதை உணர்த்துகிறது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னை: நெகிழியைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் தடையாக இருக்கும் போலித் தீர்வுகளை அம்பலப்படுத்தித் தவிர்க்கவும் சரியான தீர்வுகளை நோக்கி நகரவும் கைகோர்க்க குடிமைச் சமூகத்துக்கு அழைப்பு விடுக்கிறோம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகின் மொத்த நெகிழியையும் ஒரு நாடாக உருவகித்தால், அந்த நாடு உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கார்பன் உமிழும் நாடாக இருக்கும். இது, நெகிழி பயன்பாடானது எந்த அளவுக்குக் காலநிலை மாற்றத்தோடு நெருங்கியத் தொடர்புடையது என்பதை உணர்த்துகிறது.

பெரும்பாலும் நெகிழியானது கழிவாக நம் சூழலில் வெளிப்படும்போது மட்டுமே ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தைப் பெறுகிறது. ஆனால், நெகிழியின் மூலப்பொருளான பெட்ரோலிய அகழ்வு, சுத்திகரிப்பு (Refining), உற்பத்தி, விநியோகம், பயன்பாடு போன்றவை, ஏன் மறுசுழற்சியும்கூட கடுமையான சூழல் பாதிப்புகளையும், உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியது.

மேலும், நெகிழியின் உற்பத்தியின்போது அவற்றுக்குக் குறிப்பிட்டப் பண்புகளைக் கொடுப்பதற்காக ஏராளமான வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்த வேதிப்பொருட்களில் சில வேதிப்பொருட்கள் மட்டுமே இதுவரையிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதோடு அவை புற்றுநோய், இனப்பெருக்கக் கோளாறுகள் உட்படக் கடுமையான தீங்குகளை ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

நெகிழிகள் எரிக்கப்படுதல், வெயிலிலும் மழையிலும் சிதைதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் உருவாகும் நுண்ணெகிழித் துகள்கள் நம் மூச்சுக்காற்றிலும், கடல் உணவு, உப்பு, நாம் உண்ணும் தாவரங்கள், பால் என எதிலும் கலந்திருக்கின்றன. நெகிழியின் நுண்துகள்கள் மனித இரத்தம், தொப்புள்கொடி, நுரையீரல் திசுக்கள், விந்தணுக்கள் வரையிலும்கூட பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக, நெகிழி மட்குவதில்லை என்று சொல்லப்படுவது அதன் மிகப்பெரிய பாதிப்புகளின் ஒரு சிறு துளி மட்டுமே. நச்சு வாயுக்களையும் சாம்பலையும் உருவாக்குதல், கார்பன் உமிழ்வு, பொருளாதாரத்தைச் சிதைக்கும்படியாக குப்பை மேலாண்மையின் செலவினங்களை அதிகரித்தல், உயிர் பன்மையத்தையும், மண்வளத்தையும், நீர்நிலைகளையும் அழித்து மாசுபடுத்துதல், விளிம்புநிலை மக்களின் மீதான நேரடி பாதிப்புகள் - சுரண்டல் என நெகிழிப் பிரச்சினையானது பிரம்மாண்டமாக விரிந்துகொண்டே செல்கிறது.

நெகிழியின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது ஒன்றே நெகிழி மாசிலிருந்து நாம் விடுபடத் தீர்வாக இருக்கிறது. ஆனால், பெருநிறுவனங்கள் தங்கள் இலாபத்தைத் தக்கவைப்பதற்காக போலியான தீர்வுகளை நெகிழிப் பிரச்சினைக்கு தீர்வுகளாக முன்வைத்து அரசாங்கங்களையும், குடிமக்களையும் திசைதிருப்புகின்றன.

கெடுவாய்ப்பாக இத்தகைய போலித்தீர்வுகளே ஊடகங்கள் மற்றும் வெகுமக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. போலித்தீர்வுகள் பொதுமக்களிடையே மட்டுமின்றி நெகிழியை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் ஐ.நா வின் முன்னெடுப்புகளையேத் திசைதிருப்புகின்றன. இவற்றை அம்பலப்படுத்துவதன் முக்கியத்துவம் வெகுவாக உணரப்பட்டதால், ஜூன் மாதத்தில் 15 நாட்கள் உலகம் முழுதும் 'அம்பலமாகும் போலித் தீர்வுகள்' (False Solutions Exposed) என்ற பெயரில் நெகிழி மாசுக்கு எதிரான தீவிரப்பிரச்சாரத்தை சூழல் நலனுக்காய் பாடுபடும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் செய்தன.

நெகிழி வெகுமக்களிடையே ஒரு பேசுபொருளாக இருந்தாலும்கூட பெரும்பாலான நேரங்களில் அவர்கள் போலித் தீர்வுகளால் திசைதிருப்பப்படுவதும், இதன் பின்னிருக்கும் அரசியல் வணிக நலன்களை உணராதிருப்பதும் நெகிழிக் கட்டுப்பாட்டில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. இந்த அரசியலற்றத் தன்மையே உலக அரங்கில் வலுவான சக்தியான இந்தியா, நெகிழியை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் ஐ.நா வின் முன்னெடுப்புகளில் நெகிழி மாசுறுத்திகளுக்கு (Plastic Polluters) சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்பாக அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சைவ உணவைப் பின்பற்றும் நபர்களுக்கு கிடைக்கும் பயன்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.