பப்ஜி மதனின் ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : May 11, 2022, 2:12 PM IST

பப்ஜி மதனின் ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனு குறித்து சென்னை காவல்துறை பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆபாசமாக பேசி பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் தவறான வழியில் கொண்டு சென்றதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டது. இவ்வாறு அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் பப்ஜி மதன் தலைமறைவானார். பின்னர் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையினால் கடந்த ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மதன் தரப்பு வழக்கறிஞர், ”பப்ஜி மதன் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகளின் படி அவருக்கு 3 மாதம் தான் தண்டனை வழங்க முடியும். ஆனால் அவர் ஒன்பதரை மாதங்களாக சிறையில் உள்ளார். மேலும் மதன் மீது போடப்பட்டுள்ள பிரிவுகள் பெரும்பாலும் பொருத்தமற்றவையாக உள்ளன. எனவே அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். மதனின் மனு குறித்து பதிலளிக்க காவல்துறை தரப்பில் கூடுதல் அவகாசம் வழங்குமாறும் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஒரு வாரம் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.