நாட்டுப்புறப் பாடல்களைத் தொடர்ந்து தற்போது கானா பாடல்களும் திரைப்படங்களில் இடம்பிடித்துப் பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது. குறிப்பாக பல கானா கலைஞர்கள் அரசியல், சமூகக் கருத்து போன்ற பாடல்களைப் பாடுவது வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு சரவெடி சரண், டோனி ராக் ஆகிய இரண்டு கானா பாடகர்கள் பாடிய பாடல் காணொலி வெளியானது. அதில் சரவெடி சரண் என்பவர் பாடும் பாடல் வரிகள் மிகவும் தரக்குறைவான வகையிலும், சிறுமிகளை ஆபாசமாகச் சித்திரிக்கும் விதத்திலும் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
அத்துடன் சிறுமிகள் தொடர்பாக அவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளப்பியுள்ளது. இந்தக் காணொலி திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், சரவெடி சரணை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யலாம் எனப் பரிந்துரைத்துள்ளார்.
பாடகர் சரவெடி சரண் வீடு சென்னையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகவுள்ள நிலையில் காவலர்கள் தீவிரமாகப் பாடகர் சரணை வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' - அதிமுகவினர் அமளி