ETV Bharat / state

என்எல்சியை எதிர்த்து போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி - வைகோ கண்டனம்!

author img

By

Published : Jul 28, 2023, 9:07 PM IST

Etv Bharat
Etv Bharat

என்எல்சியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

சென்னை: நெய்வேலியில் பொது மக்கள் போராட்டத்தின் போது காவல் துறை தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் என்.எல்.சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க சுமார் 36,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அனல் மின் நிலையங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது.

நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சியில் வேலை என என்எல்சி நிர்வாகம் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் 19,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. கடலூர் மாவட்ட ஆட்சியர் “நிலம் எடுப்பு செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன” என்று கூறி உள்ளார். ஆனால் எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால் 2013ஆம் ஆண்டு புதிய நிலமெடுப்புச் சட்டப்படி அந்த நிலத்தை மீண்டும் நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை கடலூர் மாவட்ட ஆட்சியர் உணரவில்லையா’’ என கேள்வி எழுப்பினார்.

’’10 ஆண்டுகள் பொறுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் வரை 10 நாட்கள் பொறுக்க முடியாதா?. நிலம் எடுப்பில் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டதில் மிகக் கடுமையான பாரபட்சம் நடந்திருக்கிறது. சட்டப்படி இழப்பீடு நிர்ணயம் செய்தால் விவசாயிகளுக்கு மறுவாழ்வு, மறுகுடியமர்வு பணிகளை முறையாக செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.

நெய்வேலியில் பொது மக்கள் போராட்டத்தின் போது காவல்துறை தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தென்னைநார் நிறுவனங்களின் கோரிக்கையை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு: முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.