ETV Bharat / state

டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 7:30 AM IST

Updated : Oct 5, 2023, 7:44 AM IST

Teachers hunger strike
8வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்

Teachers hunger strike: இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வேண்டும் என கடந்த 8 நாளாக உண்ணாவிரதப் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலையில் ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

சென்னை: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" (Equal Pay for Equal Work) வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தங்களின் உரிமைக்காக கடந்த 8வது நாளாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதேபோல், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களுக்கு முழு நேர பணி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இன்று 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள், தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு மேலும் மூன்று மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

எனவே, ஆசிரியர்கள் அனைவரும் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்குச் சென்று, அதனைத் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதேபோல், பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவதை 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு செய்யப்படும் எனவும், ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்று பணிபுரிய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஆசிரியர் பணித் தேர்வினை எழுதுவதற்கு வயது வரம்பை உயர்த்தி அறிவித்து அவர்களும் போராட்டத்தை கைவிட்டு திரும்ப வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்காமல் ஆசிரியர்கள் நேற்று இரவு கொட்டும் மழையிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்களையும் குண்டு கட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றி வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அறவழியில் போராடும் ஆசிரியர்களான தங்களை, காவல்துறை கைது செய்வது கண்டிக்கத்தக்கது எனவும், அரசு தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கைது செய்யும் பொழுது கதறி வருகின்றனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு வாகனங்களில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். கைது செய்யப்படும் ஆசிரியர்கள், வளாகத்தில் இருந்து வெவ்வேறு பகுதியில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், காவல்துறை இவர்களை சென்னையை விட்டு அப்புறப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: செம்மண் அள்ளிய விவகாரம்.. ஜெயக்குமாரின் மனுவை ஏற்ற நீதிமன்றம்.. நெருக்கடியில் சிக்கிய பொன்முடி!

Last Updated :Oct 5, 2023, 7:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.