ETV Bharat / state

'அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு கருகிக் கொண்டுள்ளது'

author img

By

Published : Oct 18, 2020, 11:00 PM IST

pmk founder Ramadoss statement about 7.5% reservation, for govt school students join medical course
pmk founder Ramadoss statement about 7.5% reservation, for govt school students join medical course

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு கருகிக் கொண்டுவருகிறது. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற உயிர்த்தண்ணீர் உடனடியாக ஊற்றப்படவில்லை என்றால், அரசுப் பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் நீட் தேர்வு விவகாரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதிக்கத் தொடங்கி விட்டனர். அவர்களுக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதால், எந்தச் சலுகையும் தேவையில்லை என்று திட்டமிட்டு ஒரு பரப்புரை முன்னெடுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

உண்மையில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவுகள் கருகிக் கொண்டிருக்கின்றன. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற உயிர்த்தண்ணீர் உடனடியாக ஊற்றப்படவில்லை என்றால், அரசுப்பள்ளி மாணவர்களில் ஒருவர்கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது.

தமிழ்நாட்டில் 2019-20ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் இரண்டாயிரத்து 557 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால், நடப்பாண்டில் இது ஆயிரத்து 615ஆக குறைந்து விட்டது.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காடு, கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் ஒரு விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதில் இருந்தே அவர்கள் எந்த அளவுக்கு பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களின் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை (கட்- ஆஃப்) எடுத்தவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

முதற்கட்ட மதிப்பீடுகளின்படி நடப்பாண்டில் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 500-க்கும் கூடுதலாகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 480-க்கும் கூடுதலாகவும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 450-க்கும் அதிகமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்புகள் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர இயலும். 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற இயலும்.

எந்த இடஒதுக்கீடாக இருந்தாலும், அதை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தும் ஒரே விஷயம் இட ஒதுக்கீட்டிற்கான தேவையும், நியாயமும் உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வரை அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், இப்போது ஒற்றை இலக்கத்தில் கூட அவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடிவதில்லை என்பதே உண்மை.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்த ஒற்றைத் தேவை போதுமானது. மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இதைவிடக் குறைவாக 7.5 விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆகவே, இட ஒதுக்கீட்டின் அளவும் சரியானது தான்.

7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க இந்த காரணிகளைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. ஒரு சில மணி நேரங்களில் இது குறித்து முடிவெடுக்க முடியும் எனும் போது, நான்கு மாதங்களுக்கும் மேலாக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் முடிவெடுக்காமல் ஆளுநர் வீண் தாமதம் செய்வது நியாயமற்றது.

7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசுப் பள்ளிகளில் படித்த சுமார் 400 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். எனவே, இனியும் தாமதிக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.