எம்.ஜி.ஆர்-க்கு புகழாரம் சூட்டிய மோடி; அதிமுகவுக்கு கூட்டணி வலையா?

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 17, 2024, 4:17 PM IST

எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டிய மோடி

Modi wishes MGR Birthday: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா இன்று (ஜன.17) கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி எம்.ஜி.ஆரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

சென்னை: நடிகரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த எம்.ஜி.ராமசந்திரன் 107வது பிறந்த நாள் விழா இன்று (ஜன.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் அந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, எம்.ஜி.ஆர் குறித்து தனது X வலைத்தள பதிவில், “தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார்.

அவரது திரைப்படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி முறிந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்திருந்த நிலையில், எம்.ஜி.ஆர் குறித்து நரேந்திர மோடி பதிவிட்டது. தற்போது, பேசு பொருளாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன் முதலாக பாஜகவுடனான கூட்டணியைத் தொடங்கினார். பின் 1999ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியை ஜெயலலிதா முறித்துக் கொண்டார்.

பின் 2004ஆம் ஆண்டு மீண்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடர்ந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அப்போது நடைபெற்ற தேர்தலில் "மோடியா இந்த லேடியா என்று பார்ப்போம்" என ஜெயலலிதா சென்ற இடங்களிலெல்லாம் பேசினார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அதிமுக பாஜகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தது. தற்போது பாஜகவின் மாநில தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலையின் பேச்சுக்கள் அதிமுகவினரை வெகுண்டு எழச் செய்தன.

குறிப்பாக, முத்துராமலிங்க தேவர், சி.என்.அண்ணாதுரையை விமர்சித்துள்ளார் என்று ஒருமையில் கூறினார். மேலும், ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, 1991 முதல் 1996 வரை தமிழ்நாட்டில் ஊழல் தலைவிரித்தாடியது என்று கூறிய நிலையில், இரு தரப்புக்கும் மோதல் போக்கு உருவானது. இதனைத் தொடர்ந்து, அதிமுக கட்சி நிர்வாகிகளான ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் அண்ணாமலையின் பேச்சை கடுமையான விமர்சித்துப் பேசினார்.

இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு இனி பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கு, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இது வெறும் நாடகம். பாஜக - அதிமுக கூட்டணி முறிவு புதிதல்ல. பலமுறை இதுபோல் நடந்துள்ளது என்று விமர்சனம் செய்தன. இதனைத் தொடர்ந்து நரேந்திர மோடி, இன்று (ஜனவரி 17) எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்குப் புகழாரம் சூட்டும் விதமாகப் பதிவு வெளியிட்டுள்ளார்.

  • தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார். அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு…

    — Narendra Modi (@narendramodi) January 17, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: 'கரையான் போல நிலத்தை அரிக்கும் வடமொழி' - கவிஞர் வைரமுத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.