'கரையான் போல நிலத்தை அரிக்கும் வடமொழி' - கவிஞர் வைரமுத்து

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 16, 2024, 1:21 PM IST

இந்தி போன்ற வடமொழி கலப்பதினால் தமிழ் மொழி கலப்படம் ஆகிறது

Vairamuthu: ஒரு மனிதன் பண்பாட்டுடன், நாகரிகத்துடன் திகழ தமிழ், ஆங்கிலம் போதும். இந்தி மொழி மீது அச்சம் உள்ளதாகவும், வட மொழி கலக்கும் போதெல்லாம் தமிழ் மொழி கலப்படம் ஆவதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இந்தி போன்ற வடமொழி கலப்பதினால் தமிழ் மொழி கலப்படம் ஆகிறது

சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து இன்று (ஜன.16) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திருக்குறள் பாடல் பாடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து கூறியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் தமிழர் கூட்டம் திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது. திருவள்ளுவர் நமது பண்பாடு மற்றும் வரலாற்றின் அடையாளம் என்றவர், கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட 'இருமொழி கொள்கை' குறித்து சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன் என்றார்.

திருக்குறளை படிக்கும் போது, நாங்கள் தமிழையே படிக்கிறோம். 'மும்மொழி கொள்கை திணிப்பு' என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்திமொழி திணிப்பை வேண்டாம் என்கிறோம். இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

மேலும், இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்பவர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். அங்கிருந்து இங்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலால் வருவது. தாய்மொழி பண்பாட்டு மொழி, ஆங்கிலம் நாகரிக மொழி என்றார். ஒரு மனிதன் பண்பாட்டுடன், நாகரிகத்துடன் திகழ தமிழ், ஆங்கிலம் போதும். இந்தி மொழி மீது அச்சம் உள்ளது. வட மொழி கலக்கும் போதெல்லாம் தமிழ் கலப்படம் ஆகிறது.

எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ? அதுபோல், வடமொழி நிலத்தை அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்து இருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை.

இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றும், திருக்குறளை நாள்தோறும் தமிழர்கள் தங்கள் வீடுகளில் ஓத வேண்டும்” என்றும் பேசினார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை, 'பிரதமரின் புதிய கல்விக்கொள்கை படிபடியாக தமிழத்தில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பதாகவும், தாய் மொழியை அடிப்படையாக கொண்ட மும்மொழி கல்வி கொள்கையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்' எனவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து 'அண்ணாமலை போன்றோர் பகல் கனவு பலிக்காது எனவும் மும்மொழி கல்வி கொள்கையானது தமிழ்நாட்டில் ஒருபோதும் உருவாக வாய்ப்பே இல்லை' எனவும் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காணும் பொங்கல் கொண்டாட்டம்: சென்னையில் பாதுகாப்புகாக 15,500 போலீசார் குவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.