ETV Bharat / state

உலகிலுள்ள புலிகளில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன - ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

author img

By

Published : Jul 28, 2023, 12:28 PM IST

இந்தியாவின் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் விளைவாக, உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் புலிகள் இந்தியாவில் உள்ளதாகவும், சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் டால்ஃபின் பாதுகாப்புத் திட்டத்தையும் இந்தியா செயல்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Project Tiger
சென்னை

சென்னை: ஜி20 நாடுகளின் 4வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் நேற்றைய முன்தினம் (ஜூலை 26) தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஆதார வள பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதார தொழில் கூட்டணியை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இறுதி நாளான இன்று (ஜூலை 28), ஜி20 நாடுகளின் நான்காவது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை குறித்த அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "சர்வதேச அளவில் பூனைக் குடும்பத்தை சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட 7 விலங்குகளை பாதுகாக்க ஐபிசிஏ (International Big Cat Alliance) என்ற அமைப்பை இந்தியா தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இருந்த முன்னோடி திட்டமான 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தில்' (Project Tiger) இருந்து நாம் கற்றுக் கொண்டதை வைத்தே இந்த ஐபிசிஏ தொடங்கப்பட்டது.

புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் விளைவாக, உலகில் வாழும் புலிகளில் 70 சதவீதம் புலிகள் இந்தியாவில் உள்ளன. இதேபோல் சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் டால்பின் பாதுகாப்புத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, அதில் வேலை செய்து வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

அதேபோல், வருகிற 2070ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ஜியத்தை அடைவதற்காக இலக்கு நிர்ணயித்துள்ளோம். சர்வதேச சோலார் கூட்டணி உள்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து கார்பன் உமிழ்வை குறைக்கவும், சூரிய ஒளியை திறம்பட பயன்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் பல்லுயிர் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது" என கூறினார்.

'புலிகள் பாதுகாப்பு திட்டம்' கடந்த 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகாவில் உள்ள மைசூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் இன்டர்நேஷனல் பிக் கேட்ஸ் அலையன்ஸ் (IBCA) என்ற அமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சர்வதேச அளவில் பூனைக் குடும்பத்தை சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட 7 விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

இதையும் படிங்க: நம்பிக்கையில்லா தீர்மானம்: மோடி அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.