சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை உட்பட 12 வகையான பொருட்களை பயன்படுத்த மாநகராட்சி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 10 முதல் 16 ஆம் தேதி வரை 8,813 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டு 2,631 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,466 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.9,85,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவாண்மியூர் கடற்கரை பகுதிகளில் 1,492 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 62 கடை உரிமையாளர்களிடமிருந்து 50.9 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 7,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனமழையால் சுவர் இடிந்து விபத்து... 3 வயது குழந்தை உயிரிழப்பு