ETV Bharat / state

கோவிலின் வணிக வளாகத்தில் காங்., எம்எல்ஏவுக்கு கடை ஒதுக்க தடை கோரி வழக்கு!

author img

By

Published : Apr 15, 2023, 5:44 PM IST

புதுச்சேரி கொஞ்சுங்கிளி மாரியம்மன் கோவிலின் வணிக வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேசுக்கு கடை ஒதுக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Restrain
புதுச்சேரி

சென்னை: புதுச்சேரியை சேர்ந்த ஜீவரத்தினம் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், "புதுச்சேரி சண்முகபுரத்தில் உள்ள கொஞ்சுங்கிளி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகளை கொண்ட வணிக வளாகம் கட்டப்படுகிறது. கொஞ்சுங்கிளி மாரியம்மன் கோவில் என்ற பெயரில் வங்கியில் கடன் பெற்று கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த வணிக வளாகம் கட்டுவதற்கு டெண்டர் எதுவும் கோராமல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கதிர்காமம் தொகுதியின் எம்.எல்.ஏ கே.எஸ்.பி.ரமேஷ்-க்கு இந்த பணியை, கோவிலின் சிறப்பு அதிகாரி சக்கரவர்த்தி ஒதுக்கியுள்ளார். இந்த வணிக வளாகம் கட்டப்படும் 6,000 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தை குத்தகைக்கு பெற தேசியமயமாக்கப்பட்ட வங்கி தயாராக இருந்த நிலையில், வணிக வளாகம் கட்டும் பணி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவில் வணிக வளாகத்தில் கதிர்காமம் எம்.எல்.ஏ.வுக்கு அலுவலகம் ஒதுக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

இதில் சக்கரவர்த்தி, கோவிலின் சிறப்பு அதிகாரி என்பதை மறந்து எம்எல்ஏவுக்கு ஆதரவாக செயல்படுகிறார், கோவிலின் அன்றாட அலுவல்களையும் அவர் திறம்பட மேற்பார்வை செய்யவில்லை. இப்போது பல்வேறு முறைகேடுகள் செய்து தரமற்ற பொருட்களை கொண்டு இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் இடிந்து விழுந்தது.

எனவே கட்டுமான பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். கோவில் வணிக வளாகத்தில் கதிர்காமம் எம்.எல்.ஏ.வுக்கு அலுவலகம் ஒதுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். சிறப்பு அதிகாரி சக்கரவர்த்தியை பதவியிலிருந்து திரும்ப பெறும்படியும் உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் வரும் 17ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: மருத்துவரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் - போலீசார் சமரசம் பேசி புகாரை வாபஸ் பெற வைத்ததாக குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.