ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தொகுதியில் குளறுபடி- உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

author img

By

Published : Feb 24, 2023, 9:08 AM IST

Etv Bharat
Etv Bharat

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை சட்டவிரோதமாக அடைத்து வைப்பதற்காக தற்காலிக கொட்டகைள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்றக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை சட்டவிரோதமாக அடைத்து வைப்பதாகவும் அதற்காக அமைத்துள்ள தற்காலிக கொட்டகைகளை அகற்ற வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள சுயேட்சை வேட்பாளர் ஏ.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "ஆளும் திமுக கட்சி அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக சட்டவிரோதமாகவும், அரசியலமைப்பிற்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் சட்டவிரோத செயல்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.

மேலும், 150-க்கும் மேற்பட்ட தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு, வாக்களர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், திருமண மண்டபம் மற்றும் சமுதாய கூடங்களிலும் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் மற்றும் பிற பொருட்களை விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களோ அல்லது மற்ற சுயேச்சை வேட்பாளர்களோ இந்தக் கொட்டகைகளை அணுக முயன்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

இன்னும் சில நாட்களில் பிராச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், வாக்காளர்கள் மற்ற கட்சி உறுப்பினர்களை சந்திக்காமல் இருக்க அவர்களுக்கு உணவு வழங்கி மாலை வரை கொட்டகைளில் தங்க வைக்கப்படுவதாகவும், இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிகளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் தைரியமாக மீறுவதால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதை பாதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்காலிமாக அமைக்கபட்டுள்ள கொட்டகைகளில் அதிகாரிகளின் எந்த அனுமதியும் பெறாமலும், எந்தவித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமலும் ஆயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தீயணைப்பு கருவிகள் எதுவும் அமைக்கப்படாமலும், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் இல்லாமலும் உள்ளதால், பேரழிவுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு, பிப்ரவரி 16ஆம் தேதி மனு அளித்தும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார். எனவே சட்டவிரோதமாக அமைக்கப்ட்டுள்ள கொட்டகைகளை அகற்றக்கோரியும், வாக்களர்களுக்கு பணம் மற்றும் இலவசங்கள் வழங்குவதை தடுக்கவும், இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காவலர் குடியிருப்பில் திருட்டு - எஸ்.ஐ. மகன் திருடியது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.