ETV Bharat / state

ரவுடி குள்ள விஷ்வா என்கவுண்டர் விவகாரம்; சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 7:07 AM IST

Etv Bharat
Etv Bharat

Kulla Vishwa: திருத்தணி அருகே ரவுடி குள்ள விஷ்வா என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த குள்ள விஸ்வா என்கிற விஸ்வநாதன் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றபோது, உதவி ஆய்வாளரான தயாளன், காவல் ஆய்வாளரைப் பார்த்து குள்ள விஸ்வாவிடம் கையெழுத்து வாங்கவா, இல்லை சுட்டு விடவா எனக் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதன் பின்னர், உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்ட நிலையில், திருத்தணியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட விஸ்வா, அன்று மாலை திருப்பந்தியூர் மாந்தோப்பில் வைத்து என்கவுண்டர் செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குள்ள விஸ்வா என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கை மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது தந்தை அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தனது மகன் விஸ்வா செப்டம்பர் 16ஆம் தேதி திருத்தணியிலிருந்து காவல் துறையால் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்டு, அன்று மாலையே திருப்பந்தியூர் மாந்தோப்பில் வைத்து என்கவுண்டர் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காவல் துறையினருக்கு எதிராக மப்பேடு காவல் நிலைய விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும் என்பதால், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: புழல் சிறை காவலர் பணி நீக்கம்.. மதுபோதையில் ஆம்புலன்ஸ் ஓட்டிய காவலர் சஸ்பெண்ட்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.