ETV Bharat / state

யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 2:01 PM IST

chennai high court
சென்னை உயர்நீதிமன்றம்

UPSC Exams: ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை இந்தியாவில் உள்ள 22 மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் - ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது இந்தி மொழி தெரிந்தவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், மற்ற மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்துவதால், வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறைமுகமாக மறுக்கப்படுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, டிசம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இதையும் படிங்க: "அந்த மனசுதான் சார் கடவுள்".. சமூக வலைத்தளத்தில் உதவி கேட்ட நபருக்கு உதவிய ஜி.வி பிரகாஷ்.. குவியும் பாராட்டுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.