ETV Bharat / state

தாய்லாந்தில் யானை பாகன்களுக்கு பயிற்சி: தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கு!

author img

By

Published : Dec 12, 2022, 1:13 PM IST

தமிழகத்தில் யானைகள் முகாம்களில் உள்ள பாகன்களை, ரூ.50 லட்சம் செலவில் தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி பெற அனுப்பி வைப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை சரணாலயங்களில் உள்ள யானைகளை சிறந்த முறையில் பராமரிக்க, வனத்துறையைச் சேர்ந்த 13 பாகன்கள், வனச்சரகர் ஆகியோருக்கு தாய்லாந்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்த தமிழக அரசு, அதற்காக ஆனைமலை மற்றும் முதுமலை சரணாலய நிதியில் இருந்து ரூ.50 லட்சம் நிதியை ஒதுக்கி கடந்த நவ.21 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'யானைகளை அடக்குவதிலும், பயிற்சி அளிப்பதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக திறமை வாய்ந்தவர்களாக உள்ள நிலையில், சிறிய நாடான தாய்லாந்துக்கு பயிற்சி பெற பாகன்களை அனுப்புவது தேவையற்றது.

யானைகளுக்காக சிறந்த முகாம்களும், விருது பெற்ற பாகன்களும் தமிழகத்தில் உள்ளதால், தாய்லாந்து பயிற்சிக்காக செலவிடப்பட உள்ள தொகையை மூத்த பாகன்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள வன முகாம்களில் யானைகள் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க உத்தரவிட வேண்டும்' எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (டிச.12) விசாரணைக்கு வந்த போது, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்க கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கையும், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம் தொடர்பான வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், இரு வழக்குகளின் விசாரணையையும் டிச.14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காளை, யானை ஆசீர்வாதத்துடன் நடந்த திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.