ETV Bharat / state

'சென்னையின் இந்தப் பகுதியில் மட்டும் 30 வருடமா குற்றமே நடக்கல’: பின்னணி என்ன?

author img

By

Published : Jan 2, 2021, 1:24 PM IST

Updated : Jan 2, 2021, 2:40 PM IST

ஓர் இடத்தில் குற்றம் நிகழ்ந்த பின்னர்தான் காவல் துறையினர் வருவர். முன்கூட்டியே தகவல் அளித்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு பாதுகாப்பு கொடுப்பர். ஆனால் ஒவ்வொரு நபருக்கும், தெருவிற்கும் பாதுகாப்பு கொடுப்பது என்பது சாத்தியமில்லாத காரியம். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் குற்றம் நிகழும் முன்னர் தடுத்தால் எப்படியிருக்கும்? அதைத்தான் லட்சுமி நகர்வாசிகள் நடத்திக்காட்டுகின்றனர்.

சென்னையின் இந்த பகுதியில் மட்டும் 30 வருசமா குற்றமே நடக்கலையாம்
சென்னையின் இந்த பகுதியில் மட்டும் 30 வருசமா குற்றமே நடக்கலையாம்

சென்னை: பலரின் வாழ்வாதாரக் கூடாரமாக விளங்கும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளுக்குநாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

இந்தாண்டு மட்டும் சென்னையில் 246 சங்கிலி பறிப்பு வழக்குகள், 147 கொலை வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக குற்ற சம்பவங்களே அரங்கேறாத பகுதியும் அதே சென்னையில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆச்சர்யம் தான், ஆனால் உண்மை.

நங்கநல்லூரில் உள்ள லட்சுமி நகர் தான் அந்தப்பகுதி.

ஒரு புறம் சென்னை மாநகர காவல் துறை குற்றங்கள் நிகழாமல் தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், இன்னொரு புறம் குற்றங்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. மாநகரத்தின் அதிகமாக புழங்கிக் கொண்டிருக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ற வகையில் காவலர்களின் எண்ணிக்கை இல்லை.

குற்றமே நடக்கலையாமே?

சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகரில் மொத்தம் 40 தெருக்கள் உள்ளன. நீண்டு நெளிந்து செல்லும் ஒவ்வொரு தெருவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

1990களில் சென்னையில் நிலவிய குற்றச் சம்பவங்கள் தான் இத்தெருவில் வசிப்பவர்களை ஒன்றிணைத்தது.

கூட்டம் கூடி ஆலோசித்தப் பின்னர் தங்கள் தெருக்களில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களைக் குறைப்பதற்காக மக்கள் நல மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். குடிநீர், சாலை, தெருவிளக்கு முதலிய வசதிகளை மக்கள் நலமன்றம் தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்ளும் இப்பகுதியினர், இரவு நேர கண்காணிப்பு பணி குழுவையும் அமைத்துள்ளனர்.

பாதுகாப்பு முக்கியம் பாஸு!

இரவு நேரங்களில் நிகழும் கொள்ளை சம்பவங்களை அறவே நிறுத்தியது லட்சுமி நகரின் கண்காணிப்பு பணி குழு. இந்தப் பணியில் மக்கள் நல மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஈடுபடுகின்றனர். இங்கு நன்கு புழங்கிய இவர்களே தெருக்களைக் கண்காணிப்பதால், வெளியாள்களை எளிதில் அடையாளம் கண்டுவிடுகின்றனர்.

10 பேர்கள் கொண்ட இந்தக் குழு இரவு 12 மணியிலிருந்து அதிகாலை நான்கு மணிவரை அப்பகுதி முழுவதையும் தங்கள் கழுகு கண்களால் கண்காணிக்கின்றனர். மனிதக் கண்ணுக்கு மிஞ்சியும் ஏதேனும் குற்றங்கள் நடந்துவிடக்கூடாதில்லையா, அதற்க்காத்தான் தொழில்நுட்பத்தையும் துணைக்கு அழைத்திருக்கிறார்கள். அனைத்து தெருக்களிலும் சுமார் 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆமா..சிசிடிவி வாங்க காசு வேணுமில்ல?

40 சிசிடிவி கேமராக்கள் என்பது அவ்வளவு எளிதாக வாங்கிவிடக்கூடிய கருவிகிடையாது. எப்படி சாத்தியமானது எனக் கேள்வி எழுப்பியபோது, ”முதலில் லட்சுமி குடியிருப்புவாசிகளிடம் தான் வாங்குவதாகத் திட்டம்.

பின்னர் ஸ்பான்ஸ்சர்கள் மூலம் ஏற்பாடு செய்தோம். ஆரம்பக் கட்டத்தில் நாங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது குற்றச் சம்பவங்கள் ஏதும் அரங்கேறவில்லை. இருந்தாலும் நம் கண்ணுக்குத் தப்பி ஏதும் நிகழக்கூடாது என தெளிவாக இருந்தோம்.

அதனால் தான் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளோம்”என்கிறார், மக்கள் நல மன்ற தலைவர் விஜயகுமார்.

லட்சுமி நகருக்கு கிடைத்த கவுரவம்

லட்சுமி நகரின் இந்த முயற்சியைக் கவுரவிக்கும் விதமாக, மக்கள் மன்றத்தை பாராட்டி முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் விருது வழங்கியுள்ளார். அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தவிர, கால்நடைகளை பராமரிப்பது, மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது, குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசவிடாமல் குப்பைப் பெட்டிகளில் சேர்ப்பது போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளிலும் மக்கள் நல மன்றத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

“எங்கள் பகுதிக்குள் வெறுமனே ஒருவரால் நுழைந்துவிட முடியாது. புதியதாக ஒருவர் வந்தால் அவரை நிறுத்தி விசாரித்தப் பின்னரே உள்ளே அனுமதிப்போம்.

லட்சுமி நகரில் ஒருவர் வழிதெரியாமல் திக்கற்று தவித்தால், அவர்கள் செல்ல வேண்டிய தெருவிற்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்று விடுவோம்”என்கிறார் மக்கள் நல மன்றத்தின் செயலாளர் நாராயணன்.

1990க்கு பிறகு குற்றமே நிகழாத நகரின் கதை இது!

மருத்துவமனை தொடங்க ஏற்பாடு

சுகாதாரம், பொருளாதார பாதுகாப்பு மட்டுமின்றி மருத்துவ வசதியும் இன்றியமையாதது என்பதால் அடுத்ததாக மருத்துவமனையை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர், அப்பகுதியினர்.

லஷ்மி நகர் பகுதிக்கு எனத் தனியாக ஒரு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கும் அன்புக்கரசி, தங்களது நகரைப் போல பிற நகரில் உள்ளவர்களும் அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டால் குற்றங்கள் வெகுவாகக் குறையும் என்கிறார்.

சென்னை மாநகரில் உள்ள 1700 அசோஷியேஷினில் சிறந்த அசோஷியேஷனாக லட்சுமி நகர் விருதுகளை வென்றுள்ளது.

ஒற்றுமையே பலம்!

”எங்கள் பகுதியில் பெண்கள் எந்நேரம் வேண்டுமானாலும் வெளியே வரமுடியும். பிரச்னையே இல்லை. குடியிருப்புவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அந்தப் பகுதியும் பாதுகாப்பாக இருக்கும். இதனால் காவல் துறையை தேடிச்செல்லும் வாய்ப்பும் குறையும்”என்கிறார் சுப்ரஜா ராஜேஷ்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள், அதில் அர்த்தம் உள்ளது என நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள், லட்சுமி நகர்வாசிகள். முன்மாதிரியாகத் திகழும் இவர்களின் ஒற்றுமைதான் நமக்கான பாடம்!

இதையும் படிங்க:வினோதம்: இந்தக் கிராமத்தில் இரண்டு மாடி கட்டடங்களை கட்டமாட்டாங்களாம்..!

Last Updated : Jan 2, 2021, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.