ETV Bharat / state

மாமல்லபுரத்தில் விதிமீறி கட்டப்பட்ட ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க உத்தரவு!

author img

By

Published : Apr 9, 2021, 10:49 PM IST

சென்னை: மாமல்லபுரத்தில் கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க அறிவுறுத்தியதுடன் ரூ. 10 கோடி அபராதம் விதித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் விதிமீறி கட்டப்பட்ட ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க உத்தரவு!

சென்னை மாமல்லபுரத்தில் ரேடிசன் ப்ளூ ரிசார்ட் கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாக கட்டுமானங்களை எழுப்பியிருந்தது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர் நலச்சங்க தலைவர் செல்வராஜ் குமார், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ”சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல், கடலோர மண்டல ஒழுங்குமுறை ஒப்புதல் ஆகியவையின்றி கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ளூ ரிசார்ட் கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் விசாரித்தனர். இறுதியில் கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளின்படி அனுமதி பெறாமல், மாமல்லபுரம் கடற்கரையில் ராடிசன் ப்ளூ நிறுவனத்தால் 1,100.37 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட்ட கட்டடங்களை இரண்டு மாதங்களுக்குள் அந்நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும், இல்லையெனில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும்.

மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ. 10 கோடியை இழப்பீடாக தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு செலுத்த வேண்டும். கடற்கரையிலிருந்து 200 - 500 மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களை வரைமுறைப்படுத்த மத்திய அரசை அணுக ரிசார்ட் நிர்வாகத்துக்கு அனுமதியளித்த தீர்ப்பாயம், அதுவரை அந்த கட்டுமானங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் தீ விபத்து - ரூ.20 கோடி மதிப்புள்ள பொருள்கள் நாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.