ETV Bharat / state

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

author img

By

Published : Feb 23, 2023, 10:39 PM IST

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோகுல் ராஜ் வழக்கு
கோகுல் ராஜ் வழக்கு

சென்னை: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர், கோகுல்ராஜ். இவர் வேறு சமூகத்தை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சுவாதியுடன் சென்றபோது ஒரு கும்பல் கோகுல் ராஜை கடத்திக் கொலை செய்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில் வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ்சாட்சியம் அளித்தார். விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் மாறுபட்ட சாட்சியம் அளித்ததாக கூறி, சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, கோகுல் ராஜின் தாயார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் "வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்ததில் குறைகள் உள்ளன. மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம். எங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை" என வாதாடப்பட்டது.

அரசு தரப்பில், "மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். இதை சாட்சிகளும் உறுதிபடுத்தியுள்ளது" என வாதாடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த மாணவனை கண்டித்த அண்ணனுடைய கழுத்தறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.