ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு உரிய நீர் எப்போது வரும் - முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சொல்வது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 1:51 PM IST

காவேரி நீரை திறந்தால் மட்டுமே -தமிழ்நாட்டில் திமுக -காங்கிரஸ் கூட்டனி அமைக்கபடும்!
காவேரி நீரை திறந்தால் மட்டுமே -தமிழ்நாட்டில் திமுக -காங்கிரஸ் கூட்டனி அமைக்கபடும்!

OPS statement about cauvery water issue: காவிரி நீரை திறந்துவிட்டால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கூறுமேயானால், தமிழ்நாட்டிற்கு உரிய நீர் உடனடியாக கிடைப்பதற்கு வழி உண்டு என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசுக்கும், அதுகுறித்து வாய்மூடி மவுனம் சாதிக்கும் தி.மு.க. அரசுக்கும் கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  • காவேரி நதிநீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விடுவதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசுக்கும், அதுகுறித்து வாய்மூடி மவுனம் சாதிக்கும் தி.மு.க. அரசுக்கும் கடும் கண்டனம். pic.twitter.com/vnAOs4uyey

    — O Panneerselvam (@OfficeOfOPS) August 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக, கர்நாடகாவிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, விவசாயிகள், வேளாண் பணிகளை மேற்கொண்ட நிலையில், 'தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கர்நாடகா முடிவு எடுத்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அவமதிப்பதாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும். இதில் ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீர், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. அடி நீர், ஆகஸ்ட் மாதத்தில் 45.75 டி.எம்.சி. அடி நீர், செப்டம்பர் மாதத்தில் 14.70 டி.எம்.சி. அடி நீர் என மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும். இந்த நீரை நம்பித்தான் தமிழக விவசாயிகள் வேளாண் பணிகளை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 23 தேதி வரை கிட்டத்தட்ட 75.83 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை வெறும் 20 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் 55.83 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டிய நிலையில், தமிழ்நாட்டின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இதுகுறித்து கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளது. இந்தக் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில முதலமைச்சர், இனியும் தண்ணீர் கொடுக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் தீர்வு காண்பதற்காக பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கர்நாடக அணைகளில் 80 விழுக்காடு நீர் உள்ள நிலையில், செப்டம்பர் மாதம் இறுதி வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் என்ற நிலையில், அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தால்தான் உபரி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும். உரிய நீரை திறந்துவிட முடியாது என்ற தொனியில் கர்நாடக முதலமைச்சர் பேசுவது உச்ச நீதிமன்ற அவமதிப்பாகும். உரிய நீரை திறந்துவிட்டால்தான் தமிழ்நாட்டில் பயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்த முதலமைச்சர் அதற்கு எதிராக பேசுவது முறையற்ற செயல்.

திமுக -காங்கிரஸ் கூட்டணி: கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது என்பதற்காக வழக்கம்போல், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காவிரி விஷயத்தில் மென்மையானப் போக்கினை கடைபிடிப்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட்டால்தான் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கூறுமேயானால், தமிழ்நாட்டிற்கு உரிய நீர் உடனடியாக கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பு உண்டு. ஆனால், அதைச் சொல்ல தி.மு.க. தயங்குகிறது. இது தமிழ்நாட்டிற்கு எதிரான செயல்.

காவேரி நதிநீர் திறப்பில் உறுதியான, திடமான முடிவினை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. தி.மு.க. அரசு தனது பொறுப்பினை உணர்ந்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும் என்றும், பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தினை எடுத்துரைக்க வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்திலும் வலுவான வாதங்களை தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துரைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. ஓபிஎஸ் மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.