எதிர்காலத்தில் அனைத்து வகையான செல்போன்களுக்கும் ஒரே சார்ஜர்!

author img

By

Published : Sep 22, 2022, 9:50 PM IST

எதிர்காலத்தில் அனைத்து செல்போன்களுக்கும் ஒரே சார்ஜர்!!

வருங்காலங்களில் அனைத்து செல்போன்களுக்கும் ஒரே வகையான சார்ஜர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என சால்காம்ப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநரான சசிகுமார் கெந்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் இயங்கி வரும் ஃப்ளோட்ரிக் (flowtrik) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், சால்காம்ப் (salcomp) நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கையடக்கக்கருவிகளுக்காக, செல்போன் சார்ஜர்கள் மற்றும் அடாப்டர்கள் போன்றவற்றை சால்காம்ப் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. ஃப்ளோட்ரிக் நிறுவனம் கையடக்க, AC சார்ஜர்களையும், விரைவு DC சார்ஜ் கன்ட்ரோலர்களையும் இனி சந்தையில் அறிமுகப்படுத்தும்.

சால்காம்ப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநரான சசிகுமார் கெந்தம் கூறுகையில், ’எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் செல்போன்கள் வெடிப்பதற்கும் அதன் சார்ஜர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாகவே அவை வெடிக்கின்றன. இந்தியாவில் இ-கழிவு மேலாண்மை செய்வதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லை. இ-கழிவுகளை கையாள்வது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

ஒவ்வொரு இல்லங்களிலும் அதிக அளவு இ-கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை முறையாக அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் இல்லை. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இ-கழிவுகளை முறையாக மேலாண்மை செய்ய இயலும். வருங்காலங்களில் அனைத்து செல்போன்களுக்கும் ஒரே வகையான சார்ஜர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இந்தியாவில் இருக்கும் உற்பத்தி நிலையங்கள், தயாரிக்கப்படும் துல்லியமான உலோக பாகங்கள், மின்பொருட்கள் கூட்டுத்தயாரிப்பு முறை ஆகியவை உதவி செய்கின்றன. மின் வாகனங்கள் தயாரிப்பதற்கு, மிகச்சிறந்த தகுதியும், நம்பகத்தன்மையும் வாய்ந்த பொருட்களை, நேர்மையான விலையில் அளிப்பதை எங்கள் நோக்கமாக வைத்துள்ளோம்' எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் மாணவர்கள் கற்றல் இடைவெளி குறைந்துள்ளது - கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.