ETV Bharat / state

மறுமணம் செய்வதாகக் கூறி 415 சவரன் தங்கம் மோசடி செய்தவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 9:49 AM IST

மறுமணம் செய்வதாக கூறி 415 தங்க சவரன் மோசடி செய்தவர் கைது..போலீசார் திவிர நடவடிக்கை!
முகமது ஷாபான்

Chennai Crime: சென்னையில் மறுமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி 415 சவரன் தங்க நகைகளை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை: சென்னையில், கணவரை விவாகரத்து செய்த பெண்ணின் (39) மறுமணத்திற்காக, அவர்களின் பெற்றோர் முஸ்லிம் மேட்ரிமோனியல் இணையத்தில் பெண் குறித்த விபரங்களை பதிவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை முகமது ஷாபான் என்ற நபர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், கோவையில் தங்க நகைக்கடை ஒன்றின் அதிபர் எனவும், ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறி அந்த பெண்ணிடம் அறிமுகமாகி, அவரை மறுமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அடிக்கடி வாட்ஸ் அப் மூலம் பேசி வந்துள்ளனர். மேலும், முகமது ஷாபான், அந்த பெண்ணிடம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். இவருடைய பேச்சை நம்பிய அந்தப் பெண்ணும் மறுக்காமல் முகமது ஷாபான் கேட்ட பணத்தை அவ்வப்போது கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், முகமது ஷாபான், பெண்ணின் குடும்பத்தில் செய்வினைகள் உள்ளதாகவும், அந்த செய்வினைகளை முஸ்லிம் ஹஜ்ரத்திடம் சொல்லி மசூதியில் வைத்து மந்திரம் ஓதி தீர்த்து விடலாம் எனவும், அதற்கு வீட்டில் உள்ள தங்க நகைகளை வைத்து மந்திரம் ஓத வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, முகமது ஷாபானின் பேச்சை நம்பி, வீட்டிலிருந்த 415 சவரன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், நகையை வாங்கிய முகமது ஷாபான் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, தங்க நகைகளை மசூதியில் மந்திரம் ஓதி கொடுப்பதாக எடுத்துச் சென்றவர் வரவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், தனது பெற்றோரிடம் விபரத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் முகமது ஷாபான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜான் விக்டர் தலைமையில், போலீசார் தலைமறைவாகி பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த முகமது ஷாபான் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முகமது ஷாபான் எனும் ரஹ்மத்துல்லாஹ், பாண்டிச்சேரி முத்தையால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். பி.சி.ஏ பட்டதாரியான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணை ஏமாற்றிய முகமது ஷாபான், இவர் மட்டுமல்லாது பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.

மறுமணம் செய்ய காத்திருக்கும் பெண்கள், கணவரைப் பிரிந்து விவாகரத்தான பெண்கள் ஆகியவர்களை நோட்டமிட்டு குறி வைத்து இது போல் ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, அவரிடமிருந்து மூன்று செல்போன், ஒரு லேப்டாப், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், லேப்டாப் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் போன்றே பல பெண்களிடம் இந்த நபர் பேசி வந்ததும், பல்வேறு பெயர்களில் மேட்ரிமோனியில் இணையதளங்களில் பதிவு செய்து வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் இவர் மீது புகார் அளிக்கவில்லை என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட முகமது ஷாபானை, போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட முகமது ஷாபானை மீண்டும் காவலில் வைத்து இது தொடர்பாக விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மாணவரின் படிப்பை நிறுத்த கட்டாயப்படுத்துகிறதா JNU பல்கலைக்கழகம்? என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.