ETV Bharat / state

2 ஆண்டுகளில் ரூ 12.56 கோடி மதிப்பிலான குட்கா, பான்மசாலா பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 6:52 PM IST

கடந்த 2 ஆண்டுகளில் ரூ 12.56 கோடி மதிப்பிலான குட்கா, பான்மசாலா பறிமுதல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
கடந்த 2 ஆண்டுகளில் ரூ 12.56 கோடி மதிப்பிலான குட்கா, பான்மசாலா பறிமுதல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

TN Health Minister: எளிதில் கெட்டு போகக்கூடிய உணவு வகைகளால் ஏற்படக்கக்குடிய உயிரிழப்புகளை தடுக்க தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு மேற்கொல்லப்பட்டது. இந்த ஆய்வில் தரமற்ற உணவு விற்பனை செய்த கடைகள் மீது அபராதம் விதித்தும், சீல் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் குட்கா மற்றும் பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளது எனவும், உணவகங்களில் நடத்திய ஆய்வில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறிதை்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 ன் படி, மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 28.8.2023 முதல் அனைத்து மாவட்டங்களிலும் எளிதில் கெட்டு போகக்கூடிய உணவு வகைகளான ஷவர்மா, இறைச்சி வகைகள் மற்றும் அனைத்து வகையான சட்னி, மோர் மற்றும் தயிர் ஆகிய உணவுகளின் தரம் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ள அனைத்து மாவட்ட நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஷவர்மா, மீன் மற்றும் அனைத்து வகையான இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும் 15,236 உணவகங்களை ஆய்வு செய்து, 1,572 உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 5018 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ரூ.8,79,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய சுகாதாரமில்லாமலும், தரம் குறைவான உணவு பொருட்களை வைத்திருந்த 23 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர தேங்காய் சட்னி, தயிர் மற்றும் மோர் ஆகிய உணவு பொருட்களின் தரம் குறித்தும் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 7,760 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 238 கடைகளில் தரம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு, 213 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,47,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட தொகை ரூ.10,26,800 ஆகும்.

குட்கா – பான்மசாலா தடை: உச்சநீதிமன்ற அறிவுரையின்படி, புகையிலை மற்றும் நிகோடினை சேர்மானமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை தமிழ்நாடு அரசு கடந்த 23.5.2013 முதல் அமுல்படுத்தி, இதனை வருடந்தோறும் நீட்டித்து வருகிறது.

அதன்படி 23.5.2023 முதல் இத்தடையாணையை ஓராண்டு நீட்டித்து உணவுப்பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் அளவிலான குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காதலியின் கழுத்தை அறுக்க ஆன்லைனில் கத்தி ஆர்டர்.. நெல்லை இளம்பெண் கொலையில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்!

மேலும், 603 உணவு மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, 535 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது என அறிக்கை பெறப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ரூ.21.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 35 உணவு மாதிரிகள் தரம் குறைவானது என அறிக்கை பெறப்பட்டு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ரூ.2.93 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்ற உணவு பொருட்களை சேர்த்து உணவு பாதுகாப்புத் துறை மூலமாக கடந்த இரண்டு வருடங்களில் ஒட்டுமொத்தமாக அனைத்து உணவு பொருட்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்களில் 1,67,986 இணையவழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

48,217 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, 2,975 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது எனவும், 9,720 உணவு மாதிரிகள் தரமற்றது எனவும் பகுப்பாய்வறிக்கை பெறப்பட்டு அதனடிப்படையில், உரிமையியல் நீதி மன்றத்தில் 9,093 வழக்குகள் தொடரப்பட்டு 7.97 கோடி ரூபாய் அபராதமும், குற்றவியல் நீதி மன்றத்தில் 2,063 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய்.3.40 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உணவு தரம் உறுதி செய்யும் வழிமுறைகள்: உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, உணவின் தரத்தினை உறுதி செய்யும் வகையில் கீழ்க்கண்ட அறிவுரைகளை அனைத்து உணவு வணிகர்களுக்கும் பின்பற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நியமன அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவு வணிகர்கள் தங்களுடைய உணவு பாதுகாப்பு செயல்முறைகளான உணவு தயாரிப்பு, சேமிப்பு உள்ளிட்டவை குறித்து தாங்களாகவே சுய மதிப்பீட்டினை மேற்கொள்ள வேண்டும். சுய மதிப்பீட்டின் முடிவுகளின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு செயல்முறைகள் குறித்த தேவையான சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சரிபார்ப்பு படிவங்களை உணவு பாதுகாப்பு துறை அலுவர்களின் ஆய்வின் போது சமர்பிக்க வேண்டும்.

உணவு வணிகர்கள் மற்றும் உணவினை கையாளுபவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த (Food Safety Training and Certification) பயிற்சி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு குறித்து உணவு வணிகர்களின் சங்கங்களுக்கு கூட்டங்கள் நடத்தி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உணவு பாதுகாப்பு குறித்தும், உண்ணத் தகுந்த உணவை தேர்வு செய்வதன் அவசியம் மற்றும் தேவை குறித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவின் தரம் குறித்த புகார்களை TN உணவு பாதுகாப்பு நுகர்வோர் செயலி (TN Food Safety Consumer App) வாயிலாகவும், 9444042322 என்னும் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவும், பதிவு செய்யலாம். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”, என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? - அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.