ETV Bharat / state

10 லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகளா? தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை ரத்து செய்க - ஓபிஎஸ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 8:17 PM IST

"10 லட்சம் மக்கள் - 100 மருத்துவ இருக்கைகள்" என்பதை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்க - ஓ.பி.எஸ்
ops-statement-about-tamilnadu-medical-seats

TN Medical Seats issue:தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி மக்கள் தொகை இருக்கும் நிலையில், 100 மருத்துவ இருக்கைகள் என தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பை ரத்து செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (அக்.2) வெளியிட்ட அறிக்கையில், "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியைக் கருத்தில் கொண்டு, இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை அறிவிப்பதிலும், புதிதாக மருத்துவக் கல்லூரிகளை துவக்குவதிலும், மருத்துவப் படிப்பிற்கான இருக்கைகளை அதிகரிப்பதிலும், மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிக அக்கறை செலுத்தினார். பாரதப் பிரதமரும் அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்த நிலையில், 2023-2024ஆம் கல்வியாண்டிற்குப் பிறகு, புதிதாக மருத்துவக் கல்லூரி துவங்க அனுமதி அளிக்கப்படும் போது, 50, 100, 150 என்ற எண்ணிக்கையில் தான் அனுமதி அளிக்கப்படும் என்றும், 150 இருக்கைகளுக்கு மேல் அனுமதி அளிக்கப்படாது என்றும், பத்து லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகள் என்ற குறியீட்டை மருத்துவக் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக மருத்துவ இருக்கைகள் கொண்ட மாநிலம், தமிழ்நாடு தான் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 35 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் என 72 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் மூலம் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 11,600 மாணவ, மாணவியர் மருத்துவம் பயின்று வருகின்றனர். இருப்பினும், அனைத்துத் தரப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

இதையும் படிங்க: "அதிமுக - பாஜக பிரிவு என்பது இஸ்லாமியர்கள் ஓட்டை குறித்து நாடகம்" - சுப.வீரபாண்டியன் கருத்து!

மக்களுக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைக்க வேண்டுமென்றால் இந்த சூழ்நிலையில், பத்து லட்சம் மக்களுக்கு 100 இருக்கைகள் என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்பட வேண்டுமென்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இது தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 8 கோடி என்றிருக்கின்ற நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய அறிவிக்கையின்படி, 8,000 மருத்துவ படிப்பிற்கான இருக்கைகள்தான் இருக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் கூடுதலாக 3,500 மருத்துவ இடங்கள் உள்ளன. இவ்வாறு கூடுதலாக மருத்துவ இடங்கள் இருப்பதற்குக் காரணம், அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் அதிகமாக மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டதும், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியதும் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்திய சிறந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்ற நிலையில், சிறப்பான மாநிலத்தைப் பாதிக்கும் வகையிலான முடிவினை தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கும் செயல். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை காரணமாக, இனி வருங்காலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கவோ அல்லது மருத்துவ இருக்கைகளை அதிகரிக்கவோ முடியாத சூழ்நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, "பத்து லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகள்" என்ற நிபந்தனையைத் தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதற்கு தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுக்க வேண்டுமென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: CM MK Stalin : தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதே திராவிட மாடலின் திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.