ETV Bharat / state

ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: திமுக அறிக்கை நிறைவேற்ற கோரிக்கை

author img

By

Published : Sep 2, 2021, 6:12 AM IST

ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

dmk
dmk

சென்னை: ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து எம்ஆர்பி செவிலியர்கள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ பணிகள் தேர்வாணையத்தில் போட்டித் தேர்வின் மூலம் கடந்த 2013ஆம் ஆண்டு சுமார் 7 ஆயிரத்து 243 செவிலியர்களும், அதனைத் தொடர்ந்து கொடுத்தவர்களில் தேவைக்கேற்ப தற்போதுவரை சுமார் 15,000 செவிலியர்கள் மாதம் 15000 தொகுப்பூதியத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் கரோனா காலகட்டத்தில் சுமார் 3500 செவிலியர்கள் கூடுதலாக ஒப்பந்த முறையில் எம்ஆர்பி மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் நேரடியாக நிரந்தர செவிலியர்கள் பணி அமர்த்தாமல் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்த பின்னர் அவர்களை பணி நிரந்தரம் செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் 2 வருடங்கள் பணி முடித்ததும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சுமார் 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுவரை சுமார் 3000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 12 ஆயிரம் செவிலியர்கள் பணி நிரந்தரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று இரண்டு அலைகள் உலகை உலுக்கிய நிலையில் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றி இதில் ஒப்பந்த செவிலியர்கள் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக தமிழ்நாட்டின் மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது உடன் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் செவிலியர்களின் தியாகத்திற்கு சன்மானமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடுவார் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொண்டு மக்களை காக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எனவும், ஒப்பந்த செவிலியர்களின் எதிர்பார்ப்பை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.