ETV Bharat / state

கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

author img

By

Published : Jan 10, 2023, 7:20 AM IST

பொங்கல் தொகுப்புக்கு வழங்கப்படும் கரும்புக்கான கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில், பாதியளவு மட்டுமே வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். நடப்பாண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததால், அதனை நம்பி அதிகளவில் செங்கரும்பினை விளைவித்த விவசாயிகள் மிகுந்த நட்டமடையும் நிலைக்கு ஆளாகி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் பெருங்குடி மக்களின் கடும் எதிர்ப்பினை அடுத்து, வேறு வழியின்றி பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், கரும்பு கொள்முதலை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டங்களுக்குள்ளேயே செய்திட வேண்டும் எனவும், கரும்பு ஒன்றுக்கு ரூ.33 கொள்முதல் விலையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

ஆனால், கரும்பு ஏற்றுகூலி, இறக்கு கூலி, வாகன வாடகை என்று கூறி கரும்புக்கென அரசு நிர்ணயித்த 33 ரூபாயில், பாதி அளவிற்கு எடுத்துக்கொண்டு வெறும் 15 முதல் 20 ரூபாய் அளவிற்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் வழங்குவதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரும்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலையில் 15 ரூபாய் வீதம், ஒவ்வொரு கரும்பிற்கும் பிடித்தம் செய்யப்படும்போது, பிடித்தம் செய்யப்படும் மொத்த தொகையானது ஏற்றுகூலி, இறக்கு கூலியைவிடப் பல மடங்கு அதிகமாக உள்ளதே? அவ்வாறு முறைகேடாக பறிக்கப்படும் தொகை யாருக்குச் செல்கிறது?

மாவட்டத்திற்குள்ளேயே கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்போது, வண்டி வாடகை என்ற பெயரில் ஒவ்வொரு கரும்பிற்கும் பாதித்தொகையினை பறிப்பது எவ்வகையில் நியாயமானது? கரும்பு ஒன்றிற்கு 15 ரூபாய் மட்டுமே கொள்முதல் விலையாக வழங்க முடியும் என்றால், அதனை அறிவிப்பாணையிலேயே வெளிப்படையாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கலாமே?

அதைவிடுத்து, கரும்பு ஒன்றிற்கு ரூ.33 வழங்கப்படும் என்று கொள்முதல் விலையை அறிவித்துவிட்டு, அதில் பாதித்தொகையினை மட்டும் விவசாயிகளுக்கு வழங்கி ஏமாற்றுவதென்பது சிறிதும் நியாயமற்ற கொடுஞ்செயலாகும். ஆளுங்கட்சியினரின் தலையீட்டினாலேயே கரும்பிற்கான விலை குறைத்து வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே, தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து, கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: One Side Love: சிறுமியின் நடுநெற்றியில் பொட்டு வைத்த டீன்ஏஜ் சிறுவன் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.