ETV Bharat / state

PFI அமைப்பில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கிய குற்றவாளி கைது - என்.ஐ.ஏ தகவல்

author img

By

Published : Dec 16, 2022, 10:50 PM IST

PFI அமைப்பில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கிய குற்றவாளி கைது: என்.ஐ.ஏ தகவல்!
PFI அமைப்பில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கிய குற்றவாளி கைது: என்.ஐ.ஏ தகவல்!

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பலருக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கி வந்த முக்கிய குற்றவாளியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை: தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றஞ்சாட்டி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு டிஜிட்டல் பொருட்கள், தீவிரவாத செயல்பாடுகள் தொடர்புடைய குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும் சோதனையின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய 9 நபர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, இரு பிரிவினரிடையே பகைமை உணர்ச்சியைத் தூண்டியதாகவும், மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி மதுரையைச் சேர்ந்த உமர் ஷெரிஃப் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் உமர் ஷெரிஃப் மதுரையில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நோக்கங்களை செயல்படுத்தும் விதமாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வகுப்புகள் நடத்தியது தெரியவந்துள்ளது.

குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான தலைவர்களால் வழங்கப்படும் உத்தரவுகளை ஏற்று இலக்காக உள்ளவர்களை துல்லியமாக தாக்கும் வகையில் உமர் ஷெரிஃப் பயிற்சிகள் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உமர் ஷெரிஃப் வீட்டிலிருந்து வாள், கத்தி, ஈட்டி, கட்டாரி, சுருள் வாள், கேடையம், நுஞ்சாக் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் என்.ஐ.ஏ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்பான வழக்கில் இதுவரை என்.ஐ.ஏ அதிகாரிகளால் 10 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 17ஆவது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.