ETV Bharat / state

சென்னையில் களைகட்டும் 2024 புத்தாண்டு கொண்டாட்டம்.. கடற்கரைகளில் குவியும் மக்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 8:44 PM IST

New Year Celebration
சென்னையில் களைகட்டிய 2024 புத்தாண்டு கொண்டாட்டம்

New Year Celebration in Chennai: புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு இன்று நள்ளிரவுடன் முடிவடைந்து, 2024ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னை தொடங்கி, இந்தியாவின் தலைநகரான டெல்லி வரை கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ளன.

பொதுவாக, புத்தாண்டை வரவேற்கும் வகையில், பொதுமக்கள் நள்ளிரவில் வான வேடிக்கைகளால் வர்ண ஜாலமிடுவதும், புத்தாண்டின் முதல் நாளில் புத்தாடை உடுத்தியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்வர்.

புத்தாண்டு என்றாலே, சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அப்படி ஒரு ஆனந்தம் எல்லா வருடமும் எப்போதும் குறையாமல் இருக்கும். குறிப்பாக, சென்னையைப் பொறுத்தவரை, நகரின் முக்கிய சுற்றுலாத் தலமான மெரினா கடற்கரையில் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் ஒன்று கூடுவர்.

புத்தாண்டையொட்டி, மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ராணி மேரி கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகளவு மக்கள் கூடுவார்கள் என்பதால், திருட்டு மற்றும் அசாம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறையினர் மெரினா கடற்கரை பகுதியைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், உயர் கோபுரங்களை அமைத்தும், பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியும் மெரினா கடற்கரை பகுதியில் நடைபெற்று வரும் அனைத்து நிகழ்வுகளையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மெரினா கடற்கரை மட்டுமல்லாது, பெசன்ட் நகர் கடற்கரை பகுதியிலும் மக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, பெசன்ட் நகர் பகுதியைப் பொறுத்தவரை அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் இருப்பதால், புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்கு சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் அதிகமான மக்கள் வருவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது மக்கள் குவிந்து வருகின்றனர். பெசன்ட் நகரில் நடக்கும் இந்த சிறப்பு வழிபாட்டிற்கு எல்லா வருடமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். அதனால் இந்த வருடமும் அதிகளவு மக்கள் வருவார்கள் என்பதால், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புத்தாண்டு 2024; தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு ஏற்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.