கோவை சாடிவயலில் புதிய யானைகள் முகாம் - அரசாணை வெளியீடு

author img

By

Published : Jun 20, 2023, 7:59 AM IST

கோவை சாடிவயலில் புதிய யானைகள் முகாம் - அரசாணை வெளியீடு

கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டு காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை: போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு நேற்று (ஜூன் 19) அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தற்காலிக யானைகள் முகாமாக ஏற்கனவே செயல்பட்டு வரும் சாடிவயலில், புதிய யானைகள் முகாம் அமைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2023 மார்ச் 15ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை கொட்டகைகள், கால்நடை மருத்துவ வசதிகள், சமையலறை, யானை புகா அகழிகள், யானைகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் வசதிகள் ஆகியவற்றை உருவாக்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும். இந்த முயற்சிகள் மூலம், யானைகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி, முகாம் யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.

அதேநேரம், தேவையான வசதிகள் உடன் கூடிய சிறப்பு போக்குவரத்து உள்பட மீட்புப் பணியினை வலுப்படுத்துதல் என்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும். பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்தவும் அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

இந்தத் தொகை, முகாமில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், யானை பராமரிப்பாளர்கள் மற்றும் காவடிகளுக்கான பயிற்சி, பார்வையாளர்களுக்கான காட்சிக் கூடம் அமைத்தல், உணவு தயாரிக்கும் பகுதியை மேம்படுத்துதல் மற்றும் யானைகளுக்கான குடிநீர் வசதி ஆகிய செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும்.

இவைத் தவிர, கடந்த மார்ச் 15 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, தெப்பக்காடு மற்றும் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 91 யானை பராமரிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சூழலுக்கு ஏற்ப சமூக இணக்கமான வீடுகள் கட்டுவதற்கு 9.10 கோடி ரூபாய் நிதியை அரசு அனுமதித்தும் ஆணை வெளியிட்டுள்ளது.

மேலும், முதுமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் காப்பகம் பராமரிப்பாளர்களுக்கு 44 வீடுகளும், பொள்ளாச்சி ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் காப்பகத்தில் 47 வீடுகளும் கட்டப்படும்.

முன்னதாக, கடந்த ஆண்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 1,19,748.26 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அகத்தியர் மலைப் பகுதியை அகத்தியர் மலை யானைகள் காப்பகம் என்ற பெயரில் புதிய யானைகள் காப்பகமாக அரசு அறிவித்தது. தொடர்ந்து, இந்த ஆண்டு தாய்லாந்து நாட்டிற்கு 13 யானைப் பராமரிப்பாளர்கள் மற்றும் காவடிகள் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு முதல் முறையாக சிறப்பு பயிற்சிக்காக அனுப்பி உள்ளது.

இதையும் படிங்க: Arikomban Elephant: அரிக்கொம்பனை 'ரவுடி யானை' என சொல்லக்கூடாது என வழக்கு: நீதிமன்ற உத்தரவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.