சென்னை: தமிழ்நாடு அரசியலில் எத்தனையோ உள்மாநில பிரச்னைகள் மற்றும் வெளி மாநில பிரச்னைகள் பல இருக்கும் போதும் நூற்றாண்டு கடந்தும் இன்னும் தீர்க்கமுடியாத மிக முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுவது காவிரி விவகாரம். பலவேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது ஒரு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது. அதுதான் காவிரி மேலாண்மை வாரியம். ஆனால் இதன் உத்தரவை கர்நாடக அரசு மதிப்பதாக தெரிவதில்லை என்பதே தமிழ்நாடு விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
தற்போது மீண்டும் காவிரி நீர் பிரச்னை தலைதூக்கி உள்ளது. தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. அந்த உத்தரவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கூறி, கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள், எதிர்கட்சியினர், திரைப்பட நடிகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட முழு அடைப்பு போராட்டத்தில் சமீபத்தில் ஈடுபட்டனர்.
இந்த காவிரி விவகாரம் இரு மாநில அரசியல் பிரச்னையை தாண்டி மற்றுமொரு மிகப் பெரிய பிரச்னையை அவ்வப்போது கொண்டுவரும், அதுதான் இருமாநில திரையுலகினர் இடையேயான பிரச்னை. கலைக்கு மதமோ மொழியோ கிடையாது என்பது உண்மைதான், ஆனால் காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடக திரைத்துறையினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ்த் திரையுலகமோ இதுவரை வாய் திறக்காமல் கள்ள மவுனம் சாதித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இது குறித்து நெட்டிசன்கள் கூறுகையில், "சினிமாவில் மட்டும் நாடு நாட்டு மக்கள், விவசாயம், விவசாயி என மார்தட்டும் கதாநாயகர்கள் நிஜத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள். சமீபத்தில் தனது ‘சித்தா’ படத்தின் புரொமோஷனுக்கு பெங்களூரு சென்றிருந்த நடிகர் சித்தார்த்தை, நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர் ‘தமிழ் படத்துக்கு இங்கு எதற்கு வந்து புரொமோஷன் செய்கிறார் இங்கிருந்து கிளம்பு’ என்று அவரை விரட்டியடித்தனர். சித்தார்த்தும் கன்னடத்தில் சமரசம் பேச முயற்சித்தும் அவர்கள் கேட்கவில்லை. வேறு வழியின்றி அவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
இதையும் படிங்க: நடிகர் சித்தார்த்தை சூழ்ந்த கன்னட அமைப்பினர்.. நடந்தது என்ன?
இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், சித்தார்த்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் இந்த செயலுக்கு பொதுவில் மன்னிப்புக் கேட்டார். ஆனால், இங்குள்ள ஒரு முன்னணி நடிகர் கூட இந்த விவகாரத்தில் சித்தார்த்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் ஒரு கண்டன பதிவுகள் கூட இல்லை. இந்த விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்த பிரகாஷ்ராஜ் கூட ஆங்கிலத்தில் பதிவிட்டபோது கன்னட அமைப்புகளை கண்டித்தும் அவரது தாய் மொழி கன்னடத்தில் பதிவிடும்போது ஆம் காவேரி நம்முடையதே என்று ஆரம்பிக்கிறார். அவர்களுக்கு இருக்கும் மாநில பற்று ஏன் நம்மூர் நடிகர்களுக்கு இல்லை என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஒரு தமிழ் நடிகர் கர்நாடகத்தில் அவமானம் படுத்தப்பட்டுள்ளார், ஆனால் இங்குள்ள நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் எவரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. காரணம் அவர்களது படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாது என்ற ஒரே காரணம் தான் இங்குள்ள முன்னணி நடிகர்களின் மவுனத்திற்கு முதல் காரணம். ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் கர்நாடகாவில் கிட்டத்தட்ட ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இம்மாதம் வெளியாகிறது. நிச்சயம் கர்நாடகாவிலும் வெளியாகும். அந்த நேரத்தில் அங்கு இப்படத்தை வெளியிட மாட்டோம் என்று எதிர்ப்பு வரப்போகிறது. அதேபோல் இங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கர்நாடகாவில் ஓரளவிற்கு மார்க்கெட் உள்ளது. இதனால் தான் அவர்கள் இந்த விஷயத்தில் வாய் திறக்காமல் இருக்கின்றனர். நடிகர் கார்த்தி மற்றும் ஜெயம்ரவி ஆகியோரும் கூட ஹைதராபாத்தில் ஒரு விழாவில் பேசும்போது, தமிழ் ரசிகர்களைவிட தெலுங்கு ரசிகர்கள் தான் எனக்கு பிடிக்கும் என்று பேசினர். இப்படி தங்களின் சுய லாபத்திற்காக மட்டுமே இங்குள்ள நடிகர்கள் கவனமாக உள்ளனர்.
விவசாயத்தை காப்போம் என்று படத்தில் மட்டுமே பேசி ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர். எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று இங்கு யாருமே போராடவில்லை. மாறாக தண்ணீர் தரமாட்டோம் என்று அவர்கள் தான் தற்போது போராடி வருகின்றனர். இதுவே நாம் எவ்வளவு தூரம் வேறுபட்டு உள்ளோம் என்பதை காட்டுகிறது, காவிரி நீர் தரமாட்டோம் என்று அவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், இங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் ‘லியோ’ படத்திற்கு 5 காட்சிகள் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்” என பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், “தமிழ்த் திரையுலகினர் இடையே ஒற்றுமை இல்லை. அப்படி இருந்தால் சித்தார்த்துக்கு நடந்த அவமானத்திற்கு இந்நேரம் தமிழ் சினிமா கொதித்து எழுந்து இருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடக்காததுபோல் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இனியாவது தமிழ் நடிகர்களின் கள்ள மௌனம் கலையுமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்” என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் போராடும் நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படுமா? - தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் பதில்!