ETV Bharat / state

நயன், விக்கி தம்பதியின் வாடகைத்தாய் விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்

author img

By

Published : Oct 26, 2022, 5:58 PM IST

Updated : Oct 26, 2022, 6:56 PM IST

தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்
தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தை பெற்ற விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை: நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவன் தம்பதியினருக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தைகள் பிறந்த விவகாரத்தில் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

ICMR வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும்; ஆனால் அதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டைக்குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநரால் 13ஆம் தேதி உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் அத்தம்பதியர் குழந்தை பெற்றுக்கொண்டதாகத் தெரியவந்தது. அந்த மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் நேரடி விசாரணை இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அச்சிகிச்சை தொடர்பான விசாரணையில் ஆய்வு குறிப்புகள் அறிவிக்கப்படுகின்றன.

விதிமீறல் இல்லை: இவ்விசாரணையில் இத்தம்பதியர்கள் (Intending Couple) மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ICMR) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிய வந்தது.

ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.10.5-ன்படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

2016இல் திருமணம் செய்த நயன்தாரா? இத்தம்பதியருக்கு (Intending Couple) பதிவு திருமணம் 11.3.2016இல் நடைபெற்றதாகப் பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவுச் சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவுத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ICMR வழிகாட்டு நெறிமுறைகளின்பிரிவு 3.16.2-ன்படி மேற்காணும் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குடும்ப மருத்துவர் சான்று: தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை. மேலும் விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாகத் தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை. சினைமுட்டை சிகிச்சை சம்பந்தமான நோயாளியின் சிகிச்சைப் பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

வாடகைத்தாய் ஒப்பந்தம்: ஆகஸ்ட் 2020 மாதத்தில் சினைமுட்டை (Oocytes) மற்றும் விந்தணு பெறப்பட்டு கருமுட்டைகள் (Embroyo) உருவாக்கப்பட்டு, உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு, நவம்பர் 2021 மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு, இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக்குழந்தை: செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகைத் தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சட்டத்திற்கு முந்தைய ICMR வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைத்தாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது.

விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டைக்குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் 9.10.2022அன்று தம்பதியர்களிடம் (Intending Couple) வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் தனியார் மருத்துவமனையில் கீழ்க்கண்ட குறைபாடுகள் இக்குழுவால் கண்டறியப்பட்டது.

ICMR வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால், இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை. எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச திரைப்பட விழாவில் குரங்குபெடல் திரைப்படம்

Last Updated :Oct 26, 2022, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.