12ஆம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம்? - 'நான் முதல்வன்' திட்டம் மூலம் அறியலாம்!

author img

By

Published : Jun 23, 2022, 7:13 PM IST

12ஆம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம்

பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் என்ன படிக்கலாம் என்பது குறித்து 'நான் முதல்வன்' திட்டத்தில் அறியலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை: 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு முன்னர் எந்தப் படிப்பினை எந்தக்கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்பது குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் இணைந்து https://naanmudhalvan.tnschools.gov.in/home இணையதளத்தை உருவாக்கி உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கும், அதன் பின்னர் தங்களுக்கான பணிகள் எங்கு கிடைக்கும் என்பது குறித்து தெளிவான விளக்கம் தெரியாமல் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் தாங்கள் விரும்பும் படிப்பு எந்ததெந்த கல்லூரிகளில் உள்ளது என்பது குறித்தும், அந்தப் படிப்பில் சேரத் தேவையான கல்வித்தகுதிகள், கட்டண விவரங்கள், கல்வி உதவித்தொகைகள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியாமல் மாணவர்களும், பெற்றோரும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

நமது நாட்டின் எதிர்காலம், பள்ளி வகுப்பறைகளில் நிர்ணயிக்கப்படுகிறது. தனிப்பட்ட மக்களுக்கு நன்மை பயப்பதுடன் சமூக மறுமலர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் கல்வி இன்றியமையாதது. வாழ்க்கை முன்னேற்றத்திற்குக் கல்வியே முதல்படி. வசதிவாய்ப்புகள் குறைந்த, ஏழை மாணவர்கள், பொருளாதார அடிப்படையில் முன்னேறுவதற்கும், வேலையைப் பெறுவதற்கும் உயர் கல்வியே வழி செய்கிறது.

12ஆம் வகுப்புக்குப் பிறகு தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ள, பல்கலைக்கழகங்களிலோ, கல்லூரிகளிலோ, வேறு உயர்கல்வி நிலையங்களிலோ உயர் கல்வியைப் பெறலாம். இப்போது எந்தப் படிப்பைப் படித்தாலும் படித்து முடிக்கும் முன்பே வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதே இன்றைய மாணவர்களின் விருப்பமாக உள்ளது.

12ஆம் வகுப்பு இறுதியில் மாணவர் பெறும் மதிப்பெண்களும், அல்லது நுழைவுத்தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்களும் அதைத்தொடர்ந்து கல்லூரிகளில் சேரும் படிப்புகளுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. எனவே, படிப்புகளைத் தேர்வு செய்வதிலும் கல்லூரிகளைத் தேர்வு செய்வதிலும் சிந்தித்து
முடிவெடுக்க வேண்டும். தங்களது திறமைகளைக் கண்டறிந்து, அந்தத் துறைகளில் அறிவைச் செலுத்திப் படிப்பவர்களே வெற்றி காண்கின்றனர்.

மாணவர்கள் உங்கள் விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்ற துறையைத் தேர்ந்தெடுங்கள்.

• மேல்நிலை வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்திருக்கிறீர்களோ, அதற்கேற்ற கல்லூரிப் படிப்பைத் தெரிந்துகொள்ளுங்கள்.

• படிப்புக்கான தகுதிகள் எவை? அந்தத் தகுதிகள் உங்களிடம் உள்ளதா என்பதைச் சோதித்துக்கொள்ளுங்கள்.

• மாணவர் சேர்க்கைமுறை எப்படி நடக்கிறது? 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலா? அல்லது நுழைவுத்தேர்வு அடிப்படையிலா? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

• குறிப்பிட்ட படிப்பிற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது எனில் அதற்கு முன்னதாகவே தயாராகுங்கள்.

பல்வேறு படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் குறித்த அறிவிப்புகள், 12ஆம் வகுப்புத் தேர்வுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ வெளியாகும். எனவே, சேர விரும்பும் நுழைவுத்தேர்வுக்கு
முன்பே விண்ணப்பியுங்கள். அதற்குத் தயாராகுங்கள்.

மேலும் நான் முதல்வன் https://naanmudhalvan.tnschools.gov.in/home என்ற இணையதளத்தில், மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் மூலமாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் இடம் பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர் கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சியில் 'காலை உணவு வங்கி' திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.