ETV Bharat / state

எங்களுக்கு எல்லார் வேடமும் தெரியும்! புரியும்! - அமித்ஷாவுக்கு முரசொலி பதிலடி

author img

By

Published : Nov 17, 2022, 12:59 PM IST

Updated : Nov 17, 2022, 1:05 PM IST

தாய்மொழி வழிக் கல்வி கொள்கையை பாஜக முன்னிறுத்துவது, ஆங்கிலத்தை அகற்றி இந்தியை மறைமுகமாக திணிப்பது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்க கட்டுரை மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

அமித்ஷாவுக்கு முரசொலி பதிலடி
அமித்ஷாவுக்கு முரசொலி பதிலடி

சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தாய்மொழி வழிக் கல்வி கொள்கை குறித்து விரிவாக பேசியிருந்தார். இது குறித்து முரசொலி நாளிதழில் 'அமித்ஷாவும் அன்னைத் தமிழும்' என்கிற தலைப்பில் தலையங்க கட்டுரை வெளியிடப்பட்டது.

அதில், அனைத்து மாநிலங்களுக்கும் சென்று இந்தியில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவதும், இந்தியை தான் இந்தியா முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்று பரப்புரை செய்து வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் தமிழ் கற்பிக்க வேண்டாமா? என்று கேட்க வைத்ததும்தான் தமிழ்நாட்டின் சாதனை என குறிப்பிடப்பட்டுள்ளது.

முரசொலி தலையங்க கட்டுரை
முரசொலி தலையங்க கட்டுரை

இந்தியாவின் தாய் மொழியே இந்தி. இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா பல முறை வெளிப்படையாக பேசிய நிலையில், தற்போது ஏன் தமிழ் மொழி பக்கம் வருகிறார் என்றும் முரசொலி சந்தேகம் எழுப்பியுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பை தொடங்கியுள்ளன. அதேபோல தமிழ் மொழியிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு தொடங்கப்பட வேண்டும். இதன் மூலம் தாய் மொழியின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று கூறியிருந்தார். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு தமிழில் கற்றுத் தரப்படுகிறது என்பதைக் கூட அவருக்கு யாரும் சொல்லவில்லை என முரசொலி சாடியுள்ளது.

அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழன் இந்திதான். மோடி அரசாங்கம் இந்தி உட்பட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறது. இந்தியை பாதுகாக்கவும், பிரபலப்படுத்தவும் பங்காற்றியவர்களுக்கு வணக்கம் என்று சொன்னவர் அமித்ஷா என தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முரசொலி தலையங்க கட்டுரை
முரசொலி தலையங்க கட்டுரை

நாட்டில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களில் இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) மத்திய பல்கலைக் கழகங்களில், கேந்திரிய வித்தியாலயா கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ள நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் தலைவர் அமித்ஷாதான் என்பதும் யாரும் அறியாதது அல்ல என முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.

இன்றைக்கு மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கும் புதிய தேசியக் கொள்கை என்பது பள்ளிக் கல்வியை இந்தி மயமாக்கும் கொள்கை ஆகும். சமஸ்கிருதத்தை மெல்ல மெல்ல புகுத்தும் கொள்கை ஆகும். மாநில மொழி இந்தி – ஆங்கிலம் என்ற மும்மொழிக் கொள்கையே பாஜக அரசின் கொள்கை ஆகும். இத்தோடு சேர்த்து இந்தியாவின் பண்பாட்டு மொழி சமஸ்கிருதம் அதனையும் ஊக்குவிப்போம் என்ற அளவில் அதனையும் புகுத்தும் கல்வி முறையே இவர்களது தேசியக் கொள்கை ஆகும் என கூறியுள்ளது.

முரசொலி தலையங்க கட்டுரை
முரசொலி தலையங்க கட்டுரை

இந்தியை நேரடியாகத் திணித்தால் இந்தி பேசாத மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால், ‘உங்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் தருகிறோம்’ என்ற போர்வையில் ஆங்கிலத்தை அகற்றுவதும் ஆங்கிலம் அகற்றப்பட்ட பிறகு அந்த இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து வைப்பதும்தான் அவர்களது ஒற்றை மொழிக் கொள்கை ஆகும் என தெரிவித்துள்ள முரசொலி அதனைத்தான் இங்கேயும் வந்து சொல்லிச் சென்றிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என தெரிவித்துள்ளது.

இத்தகைய ‘தமிழ்’ அரசுக்குத்தான் அமைச்சர் அமித்ஷா அறிவுரை சொல்கிறார். இந்த அறிவுரைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலை உணராதது அல்ல தமிழ்நாடு. எங்களுக்கு எல்லார் வேடமும் தெரியும்! புரியும்! என இறுதியாக கட்டுரையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரசொலி தலையங்க கட்டுரை
முரசொலி தலையங்க கட்டுரை

இது குறித்து விரிவான விளக்கத்தை தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அளித்திருக்கிறார். மருத்துவப் படிப்பை தமிழில் படிக்கத் தேவையான பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை அரசு தொடங்கி நடத்தி வருவதையும் அமைச்சர் பொன்முடி சுட்டிக் காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசை பலவீனப்படுத்தவே இந்தி மொழி விஷயத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி நம்மிடம் கூறுகையில், "அமித்ஷாவின் பேச்சு தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை அகற்றி இந்தியை இணைப்பு மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழாகவும், இணைப்பு மொழி இந்தியாகவும் இருக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து.

அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி
அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி

அரசியல் ரீதியாக பார்க்கும்போது, இந்தி மொழி விஷயத்தில் காங்கிரசை எதிர்த்து பாஜக போர் தொடுக்கிறது. இன்றைய நிலையில் தமிழ்நாடு - கேரள மாநிலங்கள் தான் இந்தியை எதிர்க்கும் விஷயத்தில் முழு வீச்சில் உள்ளன. எனவே அந்த மாநிலங்களில் பிராந்திய மொழிகளுக்கு பாஜக முக்கியத்துவம் அளிப்பதாக அறிய முடிகிறது. இந்தி திணிப்பு விஷயத்தில் காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியாகவே இவ்வாறு பாஜக செய்கிறது" என்றார்.

இதையும் படிங்க: "பாஜக அல்ல, ஆம்ஆத்மிதான் காரணம்..." - வாபஸ் குறித்து ஆம்ஆத்மி வேட்பாளர் திட்டவட்டம்!

Last Updated :Nov 17, 2022, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.