ETV Bharat / state

தெலங்கானாவில் புலியைப் பார்த்து பயந்துவிட்டு, தமிழ்நாட்டில் நின்று முறத்தை வீசுவதில் என்ன வீரமோ? - தமிழிசைக்கு முரசொலி பதில்

author img

By

Published : Sep 14, 2022, 9:32 PM IST

Etv Bharat முரசொலி சிலந்தி
Etv Bharat முரசொலி சிலந்தி

புலியை தெலங்கானாவில் பார்த்து பயந்து ஓடி வந்துவிட்டு, தமிழ்நாட்டில் நின்று முறத்தை வீசுவதில் என்ன வீரமோ? என ஆளுநர் தமிழிசை குறித்த கேள்விக்கு முரசொலி பதிலளித்துள்ளது.

திமுகவின் அதிகார நாளேடு ‘முரசொலி’ சிலந்தி என்ற தலைப்பில் கடந்த திங்கட்கிழமை அன்று செய்தி ஒன்று வெளியிட்டது. அதில், மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், மக்கள் நலச் சட்டங்களுக்கும் ஆளுநர்கள் தடை ஏற்படுத்த நினைத்தால், தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் சந்திக்க வேண்டிவரும் என தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எச்சரிக்கை விடும்விதமாக செய்தி அமைந்திருந்தது.

இந்நிலையில், ஆளுநர் தமிழிசை கேள்விக்கு, பதில் அளித்து முரசொலி இன்று (செப்.14) செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சிலந்தி பதில்கள் - கேள்வி : - தமிழ்நாட்டிலிருந்து ஒரு கட்சியின் பத்திரிகையில் (முரசொலி) நான் அவமதிக்கப்பட்டதாக எழுதியுள்ளனர். நான் அவமதிக்கப்படவும் இல்லை, அலறவும் இல்லை என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளாரே?

சிலந்தி: - ஹைதராபாத்தில் அவர் அவமதிக்கப்பட்டதாக முரசொலி எழுதவில்லை! அவர் அப்படி கூறியதாக ஏடுகள், செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதைத்தான் முரசொலி சுட்டிக்காட்டியது. அவர் பேசியதாக ஏடுகளில் வெளிவந்த செய்திகள் முழுவதையும் முரசொலி எடுத்துக்காட்டவில்லை. “ ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை) மதிக்கப்படுவதில்லை, பல விவகாரங்கள் குறித்து விவரங்கள் கேட்டால் அரசாங்கம் பதிலளிப்பதில்லை, ராஜ்பவன் தீண்டத்தகாத இடமாக மாறிவிட்டது" என்று அந்த நிகழ்ச்சியில் பேசியதாக ' தி இந்து' ஏடு குறிப்பிட்டிருந்தது.

குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஆளுநர் மாளிகையில் தான் நடத்திய போது, தெலங்கானா முதலமைச்சர் மட்டுமல்ல, ஒரு மாவட்ட ஆட்சியர் கூட அந்த விழாவுக்கு வரவில்லை எனக்கு மதிப்புதராவிடினும் பரவாயில்லை; ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ற அளவில் அந்தப் பதவிக்காவது மரியாதை தந்திருக்க வேண்டாமா? - என்று தமிழிசை கேட்டதாக அதே ' தி இந்து' ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டுள்ளது? இதனைத்தான் ஆளுநர், தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை சுட்டிக்காட்டி, அங்கலாய்த்துள்ளார் என முரசொலி எழுதியது!

இவை எல்லாம் அவமதிப்பல்ல என்று ஆளுநர் கூற இயலாது. தான் அவமதிக்கப்பட்டதாக, அதாவது ஆங்கிலத்தில் ‘Humiliated’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திப் பேசியதையும் ஆளுநர் மறுக்கிறாரா? அந்தப் பேச்சு 'யூ டியூப்' செய்தியில் அப்படியே இருக்கிறது. ஒருவேளை ஆளுநர் தமிழிசைக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதனைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே?.

அவர் எண்ணுவது போல அந்தப் பதவி உயர்பதவியாக இருக்கலாம், ஆனால் அது நியமனப்பதவி, ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, சில ஆளுநர்கள் விவரம் தெரியாமல் தொல்லை கொடுக்கக்கூடாது. அரசியல் சட்டம் இயற்றிய மேதைகள் "பல்லை புடுங்கி வைத்துள்ளனர். பல் போன பொக்கை வாயைக் கொண்டு கடித்துக் குதறிவிடுவேன் என்று மிரட்டினால், முடிவில் என்ன கதி ஏற்படும் என்பதைத்தான் தெலங்கானா நிகழ்வுகள் விளக்கியுள்ளன. அதைத்தான் முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது”.

கேள்வி : - இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால், அதை எப்படி தமிழ்நாட்டிலிருந்து மகிழ்வாக ஏற்க முடியும்? - என்று அதே பேட்டியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை கேட்டுள்ளார்?.

சிலந்தி : - இப்படி எல்லாம் பேட்டி தருவதாலும், பேசுவதாலும் தான் நாம் அவரை ஒரு அப்பிராணி என எழுதிக்காட்டியிருந்தோம்! சென்ற இடத்தில், பிறந்த இடத்துக்கு நல்ல பெயர் வாங்கி வந்திருந்தால் சகோதரியை உச்சிமோந்து கொண்டாடுவதும், சென்ற இடத்தில் சண்டை போட்டு, ஏட்டிக்குப் போட்டியாக தாறுமாறாக நடந்து கொள்பவரைக் கண்டித்து புத்திமதி கூறுவதும் தமிழ்நாட்டுப் பண்பாடுதானே.

தமிழ்ப் பண்பாடு குறித்து தமிழிசை, தனது தந்தையிடம் முற்றிலும் கற்கவில்லையோ என்ற ஐயம்தான் நமக்கு அவர் கேள்வியிலிருந்து எழுகிறது.

கேள்வி : - புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சி பரம்பரையில் வந்தவள்நான், என தமிழிசை வீராவேசமாகப்பேட்டி தந்துள்ளாரே?

சிலந்தி : - ‘புலியை தெலங்கானாவில் பார்த்து பயந்து ஓடி வந்துவிட்டு, தமிழ்நாட்டில் நின்று முறத்தை வீசுவதில் என்ன வீரமோ? ஆளுநர் தமிழிசைதான் விளக்க வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பபட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு... ஆளுநரின் தவறான வழிகாட்டுதல்... - முரசொலி கடுமையான விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.