ETV Bharat / state

உடற்கல்வி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

author img

By

Published : Jun 17, 2023, 7:55 AM IST

udhayanithi stalin
உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் வைத்து முதலமைச்சர் கோப்பை – 2023 போட்டிகளில் வெற்றி பெற்ற 1923 வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை: முதலமைச்சர் கோப்பை – 2023 சென்னை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று (ஜூன் 16) நடைபெற்றது.

இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தொடர்து அவர், சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 1923 வீரர், வீராங்கனைகளுக்கு 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டினைப் பொறுத்தவரை சென்னைக்கு என்று தனித்த அடையாளம் உண்டு. அந்த காலத்திலேயே குஸ்தி, குத்துச்சண்டை, படகுப்போட்டி, கிரிக்கெட் என அனைத்து தரப்பு மக்களும் விளையாட்டில் ஆர்வத்துடன் இயங்கி வரும் மாநகரமென்றால், அது சென்னைதான். உலகே வியக்கின்ற வகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை நம்முடைய திராவிட மாடல் அரசு நடத்திக் காட்டியது.

கல்வியில் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு ஆர்வம் அதிகமோ, அதேபோல விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். இதனை போட்டிக்கான பதிவுகளை தொடங்கியபோது விளையாட்டு வீரர்களும், ஆர்வலர்களும் கொடுத்த வரவேற்பின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களும், இந்த போட்டியில் பங்கேற்க பதிவு செய்து கொண்டார்கள்.

அரசு நடத்துகிற விளையாட்டுப் போட்டி என்ற அளவில் இல்லாமல், அரசும், மக்களும் இணைந்து நடத்துகிற போட்டிகள் என்று சொல்கிற அளவுக்கு இப்போட்டிகளுக்கு அதிகளவில் மக்கள் பங்களிப்பு இருந்து வருகிறது. வழக்கமாக விளையாட்டுப் போட்டி என்றாலே கிரிக்கெட், டென்னிஸ், தடகளம் என்ற நிலைதான் இருந்து வந்தது.

ஆனால், நம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் நமது பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் உள்ளிட்டவற்றையும் இணைத்துள்ளோம். மொத்தம் 15 விளையாட்டுகளுக்கான போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகின்றன.

இந்தப் போட்டிகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், கிராமம், நகரம், மாநகரம் என அனைத்து இடங்களிலும் இது நடத்தப்பட்டது. ஏழை, எளிய மற்றும் திறமைமிகு விளையாட்டு வீரர் வீராங்கனையர்களை அடையாளம் காணுகின்ற விதத்தில்தான் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.

38 மாவட்டங்களிலும், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி, மார்ச் இறுதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்கிலிருந்தும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 355 விளையாட்டு வீரர் வீராங்கனையர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மண்டல அளவிலான போட்டிகள் நிறைவுற்ற பின்னர், மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் அதிக பதக்கங்கள் மற்றும் அதிக புள்ளிகளை பெறும் முதல் 3 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சர் கோப்பைகள் வழங்கப்படவுள்ளன.

தனி நபர் அல்லது இரட்டையர் பிரிவில் அதிகபட்சமாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஹாக்கி போன்ற குழுப் போட்டிகளுக்கு 9 லட்சம் ரூபாய் வரையிலும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளன. சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு வகையான போட்டிகளில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் சுமார் 134 மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

விளையாட்டு என்பதில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. எல்லோரும் விளையாட்டில் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளையும் நடத்தினோம். அதில் சிறப்பாக விளையாடி வென்ற 134 மாற்றுத் திறனாளிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 159 அரசு ஊழியர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு சார்ந்தது மட்டுமல்ல. அது ஆரோக்கியத்திற்கும், புத்துணர்ச்சிக்கும் மிக மிக அவசியமான ஒன்று. உடலையும், மனதையும் ஒரு சமநிலையில் வைத்திருக்க அனைவரும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும்.

இன்றைக்கு ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரும் வந்துள்ளீர்கள். சுமார் 1300 பேர் இங்கு பரிசுகளை பெற்றுள்ளீர்கள். கடந்த 2 மாதங்கள் கோடை விடுமுறை. எவ்வளவு வெயில் அடித்தாலும், தளராமல் நீங்கள் எல்லாம் உங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் உங்களுடைய திறமைகளை நிரூபித்து வந்தீர்கள்.

இப்போது கோடை விடுமுறை முடிந்து கல்விக் கூடங்கள் அனைத்தும் திறந்து விட்டன. நீங்கள் விளையாடுவதை கைவிடக் கூடாது. அதற்குத்தான் விளையாட்டு வகுப்பு இருக்கிறது. இங்கு அரசு ஊழியர்கள் பிரிவில் ஆசிரியர்களும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக கணிதம் அல்லது அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்பை கடன் கேட்காதீர்கள் என்று உரிமையோடு கூறிக் கொள்கிறேன். நம் மாணவர்கள் தொடர்ந்து விளையாடட்டும்.

அவர்களை விளையாட அனுமதியுங்கள். விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இப்போது ஓர் எழுச்சி இருக்கிறது. கிரிக்கெட் போட்டியைத் தாண்டி பல்வேறு தனி நபர் போட்டிகளில் நம்முடைய இளைஞர்களுக்கு மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

உலகின் எந்த மூலையில் எந்த விளையாட்டு நடைபெற்றாலும், இந்தியா சார்பில் பங்கேற்று நம்முடைய தமிழ்நாட்டு வீரர் வீராங்கனையர் மிகப்பெரிய அளவில் சாதனைகளை செய்து வருகின்றனர். தேசிய அளவிலும், நம் வீரர்கள் பெரிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டு பெருமை தேடித் தருகிறார்கள்.

இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக, கிராமப்புறங்களில் உள்ள திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி, சிறந்த வீரர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்கு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும்.

இதனை மனதில் வைத்துதான் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு மைதானங்கள் இல்லாத சட்டமன்ற தொகுதிகளில், தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று சட்டப்பேரவையிலே அறிவித்தோம். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க ELITE திட்டம், M.I.M.S (Mission International Medal Scheme) திட்டம், Champions Development Scheme (CDS) போன்ற திட்டங்களின் மூலம் ஒரு வீரருக்கு அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகையை வழங்கி வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல் விளையாட்டுத் துறைக்கென்று தமிழ்நாட்டுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தும் விதமாக, பல சர்வதேச அளவிலான போட்டிகளை அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடத்த உள்ளோம். அந்த வகையில், தற்போது சர்வதேச ஸ்குவாஷ் - 2023 தமிழ்நாடு அரசு பங்களிப்பாக 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

இது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த மாதங்களிலும், சர்வதேச அளவிலான அலை சறுக்கு, ஹாக்கி மற்றும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் போன்றவற்றையும் தமிழ்நாடு நடத்தவுள்ளது. விளையாட்டுத் துறையில் இன்னும் பல புதிய முன்னெடுப்புகளை எல்லாம் எடுக்க உள்ளோம்.

பொதுமக்களும் அப்படித்தான், உங்களுக்கு இருக்கின்ற அன்றாட வேலைகளில் விளையாட்டை மறந்து விடாதீர்கள். மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் வரும் 30ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளோம். இந்த மாநில அளவிலான போட்டிகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளன. இதிலும் வென்று சாதனை படைக்க மீண்டும் ஒருமுறை என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் செந்தில் பாலாஜி - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.