சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், “காங்கிரஸ் கட்சி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருஉருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினோம். ஆன்மிகம் மற்றும் அரசியலை இரண்டு கண்களாக பாவித்து வாழ்ந்தவர்.
தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக வாழ்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து, தனது சொத்துகளை ஏழை, எளிய மக்களுக்குக்கொடுத்தவர். பிரம்மச்சாரியாக தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்குத்தொண்டு செய்தவர். இந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.
ஆளுநர் ஆளுநராக செயல்படுவது அவருக்கும் நல்லது, அவரை நியமனம் செய்த மத்திய அரசுக்கும் நல்லது. ஆளுநர் ரவி அரசியல்வாதியைப்போல, அவ்வப்போது கருத்துகளைக் கூறி வருகிறார். சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றி பேசுவதற்கு ஆளுநருக்கு மட்டுமல்ல, பாஜகவினருக்கும் நேரம் கிடையாது.
காங்கிரஸில் இருந்த மகாத்மா காந்தி, தமிழ்நாட்டைச்சேர்ந்த காமராஜர் ஆகியோர் சுதந்திரத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். இதைப்பற்றி எல்லாம் ஆளுநர் விமர்சனம் செய்வது அவர் எல்லைகளை மீறும் செயலைக் காட்டுகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்கா: மாநில காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா..? - ஜெயக்குமார் கேள்வி